*மீட்பு படையினரின் ஒத்திகையும் நடந்தது
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்களுக்கு பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மீள்தன்மை தொடர்பான பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பு நடந்தது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அரசு அலுவலர்களுக்கு அளிக்கப்படும் பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மீள்தன்மை தொடர்பான பயிற்சி வகுப்பு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சியினை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி பேரிடர் மேலாண்மை பிரிவு இயக்குநர் முனைவர் அரசு சுந்தரம், சென்னை பல்கலைக்கழக புவியமைப்பியல் துறை பேராசிரியர் முனைவர் ராம்மோகன் ஆகியோர் அளித்தனர். இந்த வகுப்பில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில், பேரிடர் காலங்களில், இன்னல்களை எதிர்கொள்ளவும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, வனத்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் இதர துறைகளைச் சார்ந்த 60க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாம் சென்னை அண்ணா மேலாண்மை பணியாளர் கல்லூரி சார்பில் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமினை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இப்பயிற்சி வகுப்பில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், பேரிடர் மேலாண்மைத்துறை வட்டாட்சியர் சீனிவாசன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, நேற்று தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில், நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் காட்சிபடுத்தப்பட்டிருந்தது.
இது குறித்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின்போது பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுபோன்ற பாதிப்புக்களில் இருந்து பொதுமக்களை மீட்பதற்காக ஒரு குழு நீலகிரி மாவட்டத்திலேயே முகாமிட்டுள்ளது. இந்த குழுவினர் பருவ மழைக்காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுவார்கள் மற்றும் சாலை சீரமைப்பு போன்ற பணிகளையும் மேற்கொள்வார்கள்.
இது தவிர ரசாயன தொழிற்சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், அதில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள்.
தற்போது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள குழுவினரின் மீட்பு உபகரணங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன’’ என்றனர்.
The post அரசு அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி appeared first on Dinakaran.