அரசியல் வேண்டாம்

3 months ago 21

சென்னை மெரினாவில், போர் விமானங்களின், பிரமாண்ட சாகச நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதை காண 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். உலகிலேயே அதிக மக்கள் கண்டுகளித்த ராணுவ விமான சாகச நிகழ்ச்சியாக அமைந்துள்ளதால் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக விமானப்படை தகவல் தெரிவித்தது. பார்வையாளர்களின் எண்ணிக்கையிலும் சென்னை தான் மிகப்பெரியது. முன்னதாக, தமிழக அரசிடம் என்னென்ன வசதிகள் எல்லாம் செய்ய வேண்டும் என்று விமானப்படை அதிகாரிகள் கேட்டார்களோ? அவர்கள் கேட்ட அனைத்து வசதிகளையும் தலைமை செயலரின் தலைமையில் 2 கூட்டங்களை நடத்தி பல்வேறு சேவை துறைகளை ஒருங்கிணைத்து, யார் யாருக்கு என்னென்ன கடமைகள் என பணிகள் வழங்கப்பட்டது.

பல்வேறு மருத்துவ குழுக்கள் அமைத்து 40 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பாராமெடிக்கல் குழுக்களையும் அரசு அமைத்திருந்தது. இவர்களோடு சேர்ந்து இந்திய விமானப்படை, அரசுக்கு வைத்த கோரிக்கை ஒரு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 100 படுக்கைகளும், 20 தீவிர சிகிச்சைக்குரிய படுக்கைகளும், ரத்த வங்கி போன்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது.

65 மருத்துவர்கள் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தயார் நிலையில் இருந்தார்கள். ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை என்று 4,000க்கும் மேற்பட்ட படுக்கைகளை தமிழக அரசு தயார் செய்து வைத்திருந்தது. சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பங்கேற்றது 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள்.

விமானப்படை சாகச நிகழ்ச்சி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடந்தது. இந்நேரத்தில் வெயிலின் தாக்கம் என்பது கூடுதலாக இருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் பொதுமக்கள் குடையுடன் வர வேண்டும், தண்ணீருடன் வர வேண்டும், கண்ணாடி அணிந்து வர வேண்டும், தொப்பி அணிந்து வர வேண்டும் என்று முன்னெச்சரிக்கையாக அனைத்து அறிவுரைகளும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ஆர்வ மிகுதியில் முன்னெச்சரிக்கை அறிவிப்பை கண்டு கொள்ளாமல் வயதானவர்களும் திரண்டனர். வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.

தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து இருந்தாலும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதில் மிகச்சிறிய அசம்பாவிதமாகதான் இதை கருத வேண்டும். இந்த சம்பவத்தில், உரிய விளக்கத்தை அறிக்கையாக சமர்ப்பிக்க டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ளாமல் விலை மதிக்க முடியாத உயிர்கள் போயிருக்கின்றன என பொத்தாம் பொதுவாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சிலர் குறை கூறுகின்றனர். 5 பேர் உயிரிழப்பு வருத்தம் தான். இதிலும் அரசியல் வேண்டாம் என்பதே சமூக ஆர்வலர்கள், பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post அரசியல் வேண்டாம் appeared first on Dinakaran.

Read Entire Article