சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மதிமுக நிர்வாகி இல்ல விழாவில் நேற்று கலந்து கொண்ட மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை 3வது அணிக்கு இடம் கிடையாது. மூன்றாவது அணி அமைந்தாலும், அது வாக்குகளை பிளவுபடுத்துமே தவிர எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. நடிகர் விஜய்யை பொறுத்தவரை நன்கு படித்தவர், விவரமானவர். அதேநேரம் அரசியல் செய்வது மிக மிக கஷ்டமானது. நான் அரசியலுக்கு வந்து 4 ஆண்டுகளே ஆகிறது. என்னதான் நான் அரசியல் குடும்பத்தில் பிறந்தாலும் நேரடி அரசியலில் ஈடுபடும்போது பல்வேறு கஷ்டங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
விஜய் கொள்கைரீதியாக நல்ல விஷயங்களை சொல்லி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நேரடி அரசியல் என்பது பல்வேறு கஷ்டங்களை ஏற்படுத்தும். அவர் மிகவும் ஜாக்கிரதையாக எதிர்கொள்ள வேண்டும். மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்ற விஜய் எந்தவிதத்திலும் வாய்ப்பு வழங்கி விட கூடாது. விஜய் குறித்து சீமான் தெரிவிக்கும் கருத்துக்களை ஏற்றுக் கொள்பவர் ஏற்றுக் கொள்வர். ஒரு இயக்கத்தின் தலைவர் அவர், கருத்து சொல்லக்கூடாது என யாரும் தெரிவிக்க முடியாது. கூட்டணியில் சேரும் கட்சிகள் ரூ.100 கோடி வரை கேட்பதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மதவாத சக்திகளுக்கு எதிரான திமுக கூட்டணி வலுவாக உள்ளது. திமுக கூட்டணியில்தான் நாங்கள் தொடர்கிறோம். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து இருக்கும் என்று நம்பிக்கையில் உள்ளோம். இவ்வாறு கூறினார்.
The post அரசியல் மிக மிக கஷ்டம்: விஜய்க்கு துரை வைகோ அட்வைஸ் appeared first on Dinakaran.