அரசியல் சாசனத்தை பாதுகாப்பதே முதன்மையான போராட்டமாக உள்ளது - ராகுல்காந்தி

1 week ago 4

வயநாடு,

வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்ததால், காலியான அந்த தொகுதிக்கு வருகிற 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா போட்டியிடுகிறார். இதற்காக அவர் கடந்த மாதம் 23-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து கடந்த மாதம் 28, 29-ந்தேதி என 2 நாட்கள் பிரியங்கா தேர்தல் பிரசாரம் செய்தார்.

இந்த நிலையில் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி தனி ஹெலிகாப்டர் மூலமாக இன்று பிற்பகல் வயநாட்டுக்கு வருகை தந்தார். மானந்தவாடி அருகே காந்தி பார்க் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல்காந்தி பேசியதாவது:-

பிரியங்கா காந்தியை சகோதரியாக பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி. இப்போது, அவளை சகோதரியாக பெற்ற நீங்களும் அதிர்ஷ்டசாலிகள் தான். அவர் உங்கள் சகோதரியைப் போல, உங்கள் தாயைப் போல, உங்கள் மகளைப் போல இருக்கப் போகிறார். எனவே உங்களால் பெறக்கூடிய சிறந்த எம்.பி., இப்போது உங்களிடம் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.

இன்றைய நாளில் அரசியல் சாசனத்தை பாதுகாப்பதே முதன்மையான போராட்டமாக உள்ளது. நாட்டின் அரசியல் சாசனம் கோபத்துடனோ, வெறுப்புடனோ எழுதப்படவில்லை. ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்கள், துன்பப்பட்டவர்கள், ஆண்டுக்கணக்கில் சிறைவாசம் அனுபவித்தவர்கள் எழுதியது. மேலும் அவர்கள் அரசியலமைப்பை பணிவுடன், அன்புடன், பாசத்துடன் எழுதி உள்ளார்கள். இப்போது நடக்கும் போராட்டம் நம்பிக்கைக்கும் பாதுகாப்பின்மைக்கும் இடையிலானது ஆகும் என்றார்.

தொடர்ந்து பேசிய பிரியங்கா,

மோடிஜியின் அரசு அவரது பெரிய தொழிலதிபர் நண்பர்களுக்காக மட்டுமே இயங்குகிறது. அவருடைய நோக்கம், உங்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையைத் தருவது அல்ல. படித்த உங்கள் இளைஞருக்குப் புதிய வேலைகளைத் தருவது அல்ல. ஒரு சிறந்த சுகாதாரம் அல்லது கல்வியை வழங்குவதற்காக அல்ல என்றார்.

சுல்தான்பத்தேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோணிச்சீரா பகுதியில் நாளை(திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா கலந்துகொண்டு பேசுகிறார். நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) குடரங்கி பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து காலை 11.30 மணியளவில் நடைபெறும் வாகன அணிவகுப்பில் பிரியங்கா கலந்துகொள்கிறார்.

Read Entire Article