அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து

3 days ago 3

சென்னை,

2024-ம் ஆண்டு விடைபெற்று இன்று (புதன்கிழமை) ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியதாவது:-

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்துகள், இந்த ஆண்டு உங்கள் வாழ்கையில் புதிய உற்சாகத்தையும், புதிய மகிழ்ச்சியையும் கொண்டுவரும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

புத்தாண்டு புதிய வெற்றிகளுக்கு வித்திடட்டும்! எங்கும் நலமே சூழட்டும் என பதிவிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

மக்களுக்கு நம்பிக்கையையும் வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும். அனைத்து மக்களும் நிம்மதியான வாழ்க்கையை வாழும் சூழலை ஏற்படுத்த ஒன்றுபட்டு நிற்போம் என கூறியுள்ளார்.

த.வெ.க தலைவர் விஜய் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியதாவது:-

மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம். உழவர்கள், தொழிலாளர்களின் நலன் காப்போம். முதியோர்கள். மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாப்போம். உண்மையான சமூகநீதியுடன் சமத்துவத் தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம். அனைவரிடமும் அமைதி, ஒற்றுமை. சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் நரேந்திரமோடி ஆட்சியில், முன்னெப்போதுமில்லாத வகையில் நம் நாடு, உலகின் முன்னோடியாகத் திகழ்கிறது. வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், முதன்மையான நாடாக இருக்கிறோம். உற்பத்தி, விவசாயம், வானியல் ஆராய்ச்சி, விளையாட்டு, தொழில் வளர்ச்சி என அனைத்துத்திலும் நம் நாடு பல மடங்கு முன்னேறியிருக்கிறது.

ஆனால், தமிழகத்தின் தற்போதைய நிலை கவலைக்குரியதாக இருக்கிறது. தமிழகம் முழுவதுமே, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு பெரிதும் கவலை அளிப்பதாக இருக்கிறது. இந்தச் சூழல் மாறும். நம் தமிழக மக்கள், இந்த இருட்டிலிருந்து மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையோடும், பல கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும், புத்தாண்டை எதிர்கொள்கிறோம். புதிய வாய்ப்புகளும், வழிகளும் நம் முன்னே நிறைந்திருக்கின்றன. நம்முடைய தேர்வு, நமக்கானது மட்டுமின்றி, நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குமானது என்பதை நினைவில் கொண்டு, நல்லவற்றையே தேர்ந்தெடுப்போம். தமிழகத்தை மீண்டும் சிறப்பானதாக்குவோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

செல்வப்பெருந்தகை, வைகோ

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை:- ஆங்கில புத்தாண்டில் இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கவும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிற வகையிலும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எடுத்து வருகின்ற முயற்சிகள் வெற்றி பெறவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதன்மூலம் மக்களின் வாழ்வு ஏற்றம் பெற்று, ஒளிமயமான எதிர்காலம் அமைய அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.:- தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உறுதியாக நின்று தமிழகத்தைப் பாதுகாக்க சூளுரைப்போம். தமிழக மக்களுக்கு, உலகுவாழ் தமிழர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கே.பாலகிருஷ்ணன்-முத்தரசன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:- பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், சமூக பாரபட்சங்களும் இல்லாத ஒரு புதிய சமத்துவ சமூகம் மலர ஓர் புதிய பாதையை அமைக்கவும், அதற்கு எதிரான அனைத்து தடைகளை தகர்க்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்த இந்த புத்தாண்டில் சபதம் ஏற்போம். அனைத்து தரப்பு மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ரா.முத்தரசன்:- பெரும் நம்பிக்கையோடும், பெரு மகிழ்ச்சியோடும் வரும் புத்தாண்டை வரவேற்கிறோம். அதேநேரத்தில் கடந்து போகும் ஆண்டின் அனுபவத்தை பரிசீலித்து பயனுள்ள படிப்பினைகளை பெறுவது அவசியமாகும். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி.:- மலரும் புத்தாண்டான 2025-ம் ஆண்டு மகிழ்ச்சி நிறைந்ததாய் அமையட்டும். ஜனநாயகம் தழைக்கும் சாதனை ஆண்டாய் மலரட்டும். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். சாதி-மத அடிப்படையிலான வெறுப்பு அரசியலே இல்லாது ஒழியட்டும்; சமூக நல்லிணக்கமும் சகோதரத்துவமும் பெருகட்டும்.

ஓ.பன்னீர்செல்வம்-கமல்ஹாசன்

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- மலரும் ஆங்கில புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் இந்த இனிய நாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:- புத்தாண்டு என்பது காலத்தால் முன்னால் போவது மாத்திரமல்ல; ஞானத்தோடு, உறுதியோடு, நமது எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக்கொள்ளத் தயார் நிலையோடு முன்னோக்கி நகர்வதாகும். நமது சிறந்த கனவுகளை நனவாக்கும் ஆண்டாக இப்புத்தாண்டை ஆக்குவோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

சரத்குமார்

இதேபோல, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் எம்.பி. ரா.சரத்குமார், இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா பல்கலைக்கழக நிறுவனருமான பால் தினகரன், ஆற்காடு நவாப் முகமது அப்துல் அலி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் எம்.பி., வி.கே.சசிகலா, முன்னாள் எம்.பி. சு.திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் மாநில தலைவர் ஆ.மணி அரசன்,

தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழக ஜனதாதளத்தின் மாநில தலைவர் டி.ராஜகோபால், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி தலைவர் பொன்குமார், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் சக்திவேல், தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி. பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப்,

தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், தேசிய நாடார் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.விஜயகுமார், இந்திய கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சி தலைவர் எம்.எஸ்.மார்டீன், முஸ்லிம் மக்கள் கழக நிறுவன தலைவர் ஏ.கே.தாஜூதீன், மறுமலர்ச்சி தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் ஏ.அஸ்மத்துல்லா, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் ஆகியோரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Read Entire Article