
சிம்லா,
இமாசல பிரதேசம் இயற்கை எழில் கொஞ்சும் மற்றும் சுற்றுலா தலங்கள் நிறைந்த வடமாநிலங்களில் ஒன்றாக உள்ளது. எனினும், பருவமழை காலங்களில் அதிகளவில் மழை பெய்து மக்களில் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு விடுகிறது. நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை முன்பே பெய்து பரவலாக பல்வேறு இடங்களிலும் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு வருகிறது.
ஆனால், கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேகவெடிப்புகளும் ஏற்பட்டு பாதிப்பை உண்டு பண்ணுகின்றன. இமாசல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் தரம்பூர் பகுதியில் சியாதி என்ற கிராமம் தொடர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஜூன் மாதம் இறுதியில் இருந்து கடந்த 6-ந் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது. இதனால் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில், சியாதி கிராமத்தில் நள்ளிரவில் அந்த சம்பவம் நடந்தது. அந்த பகுதியில் ஏறக்குறைய 20 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மொத்தம் 67 பேர் வசித்து வந்த நிலையில், அவர்கள் அனைவரும், நாய் ஒன்று செய்த செயலால் உயிர் தப்பிய அதிசயம் நடந்துள்ளது.
இதுபற்றி நாயின் உரிமையாளர் நரேந்திரா செய்தியாளர்களிடம் கூறும்போது, வீட்டின் 2-ம் தளத்தில் படுத்திருந்த நாய், திடீரென தொடர்ந்து குரைக்க தொடங்கியது. என்னவென சென்று பார்த்தபோது, வீட்டு சுவரில் ஒரு பெரிய விரிசல் விட்டிருந்தது.
அதன் வழியே நீர் உள்ளே கசிந்து கொண்டிருந்தது. நிலைமையை உணர்ந்து, நான் நாயை தூக்கி கொண்டு வெளியே ஓடினேன். பக்கத்து வீடுகளில் வசித்து வந்த ஒவ்வொருவரையும் அந்த இரவிலும் எழுப்பி உஷார்படுத்தினேன். பாதுகாப்பான பகுதிக்கு தப்பியோடும்படி அறிவுறுத்தினேன். அந்த அளவுக்கு மழை பெய்து கொண்டிருந்தது என நினைவு கூர்ந்துள்ளார்.
ஆனால், சிறிது நேரத்தில் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் தரைமட்டம் ஆகின. நான்கைந்து வீடுகள் தவிர மற்ற வீடுகள் எல்லாம் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போய் விட்டன. எனினும், 67 பேரும் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தில் ஒரு கிராமமே நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டு உள்ளது.
நிலச்சரிவில் தப்பிய அவர்கள் அனைவரும் பக்கத்து கிராமத்தில் உள்ள நைனா தேவி கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு அரசு நிவாரண உதவியும் வழங்கி உள்ளது.
நிலச்சரிவை முன்பே அறிந்து, நாய் சரியான சமயத்தில் குரைத்து உரிமையாளரை எழுப்பி விட்டு, மற்றவர்களும் அதனால் உயிர்பிழைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.