
மொழி பிரச்சினை என்பது தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து மாநில மக்களுக்கும் அவர்கள் உணர்வோடு கலந்ததாகும். இதில், தமிழர்களின் தாய் மொழிப்பற்று அகில இந்திய அளவில் இன்றளவும் பேசப்படுகிறது. அதிலும் தமிழுக்கு மாற்றாக இந்தி திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. இந்தி எதிர்ப்பு உணர்வை தமிழ்நாட்டில் முதலில் விதைத்தவர் தந்தை பெரியார்தான். 1926-ல் அவருடைய குடியரசு இதழில் 'இந்தி திணிப்பின் ரகசியமும் தமிழுக்கு துரோகமும்' என்று கட்டுரை எழுதியிருந்தார். 1938-ல் இந்தியை எதிர்த்து போராட்டம் நடத்தி கைதாகி பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியும் தன்னுடைய 14 வயதில் திருவாரூர் வீதிகளில் தோளில் தமிழ்க்கொடியை ஏந்திக்கொண்டு, 'ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே!' என்று முழங்கிச்சென்றார். அவர் பற்ற வைத்த மொழிப்பற்றுதான் 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டமாக வெடித்தது.
இதுதான் 1967-ல் ஆட்சி மாற்றத்துக்கும் வழிவகுத்தது. அதனால் அன்று முதல் இன்று வரை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரமுடியாமல் திராவிட கட்சிகளே மாறி மாறி ஆட்சியில் இருக்கின்றன. அதே உணர்வு இப்போது மராட்டிய மாநிலத்திலும் தலையெடுத்துவிட்டது. மராட்டியத்தில் கடந்த ஏப்ரல் 16-ந்தேதி, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அரசாங்கம் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் 3-வது மொழியாக இந்தி கட்டாயம் என்று உத்தரவு பிறப்பித்தது. இதற்கு மாநிலம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் இந்தி கட்டாயமல்ல, விருப்ப மொழிதான் என்று மராட்டிய அரசாங்கம் திருத்தப்பட்ட உத்தரவை பிறப்பித்தது. எனினும் எதிர்ப்புகளை சமாளிக்கமுடியாமல் இரு உத்தரவுகளையும் பட்னாவிஸ் அரசாங்கம் ரத்து செய்து, மும்மொழி கொள்கை குறித்து ஆராய ஒரு கமிட்டியை நியமித்துள்ளது.
ஆனாலும் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளான உத்தவ் தாக்கரே சிவசேனா, மராட்டிய நவநிர்மாண் சேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இந்த பிரச்சினையை கையில் எடுத்ததோடு, இது மராட்டியத்தில் இந்தியை திணிக்கும் முயற்சி என்று கோஷங்களை எழுப்பியது. இந்தியை கட்டாய மொழியாக்கியதை எதிர்க்கும் உணர்வில், அரசியலில் கடந்த 20 ஆண்டுகளாக எதிரும், புதிருமாக இருந்த சிவசேனா கட்சி பிளவுபட்டதால் வெவ்வேறு கட்சிகளாக செயல்பட்ட உத்தவ் தாக்கரேவையும், அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ராஜ்தாக்கரேவையும் இணைத்துவிட்டது. இந்தி திணிப்புக்கு எதிராக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் இருவரும் கைகோர்த்து ஒரே மேடையில் தோன்றினர். மறைந்த பால் தாக்கரே தலைமையில் சிவசேனா கட்சி இருந்தபோது இருவரும் வலிமைமிக்க தளபதிகளாக ஒற்றுமையுடன் கட்சியை வளர்த்தனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் வேறு, வேறு பாதையில் சென்று கட்சிகளை தொடங்கியதால் இருவருமே தங்கள் பலத்தை இழந்தனர்.
இப்போது இந்தி திணிப்பு உணர்வு அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்துவிட்டது. பால்தாக்கரே கூட செய்து இருக்கமுடியாததை இந்தி திணிப்பின் மூலம் பட்னாவிஸ் செய்துவிட்டார் என்று ராஜ் தாக்கரே மகிழ்ச்சியோடு சொன்னார். நாங்கள் ஒன்றாக இணைந்து மும்பை மாநகராட்சியையும், மராட்டிய அரசாங்கத்தையும் கைப்பற்றுவோம் என்று உத்தவ் தாக்கரே முழங்கியது சிவசேனாவின் பிளவுபட்ட இரு அணிகளும் ஒன்று சேரப்போவதை பிரதிபலிக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.