சென்னை,
தமிழக கவர்னர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், திராவிடம் என்ற சொல்லை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது."தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டதற்கும் கவர்னருக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் கவனக்குறைவாக இந்த தவறு நடந்துவிட்டதாக " டிடி தமிழ்" தொலைக்காட்சி தரப்பில் நிர்வாகம் விளக்கம் அளித்தது. எனினும், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் கவர்னர் அக்காவுக்கு கோபம் வருகிறது!திருவண்ணாமலையில் 'கிரி'வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் 'சரி'யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல 'சரி' வலம்! ஓடாத தேரை ஓட வைத்தவர் கருணாநிதி. ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணிச் செய்தவர் முதல்வர்!'
எல்லோருக்கும் எல்லாம்' என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு (தமிழிசை) கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே...! நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது. மத்திய அரசின் 'டி.டி. தமிழை'ப்போல் - அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!" என்று தெரிவித்துள்ளார்.