அரசியலமைப்பு சட்டத்தின் வயது 75!

4 weeks ago 7

இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பது உலகிலேயே மிகவும் உன்னதமானது. ஒவ்வொரு நாட்டிலும் அரசியலமைப்பு சட்டம் இருக்கிறது. ஒவ்வொரு மதத்துக்குமென ஒரு புனித நூல் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, இந்துக்களுக்கு பகவத் கீதையும், கிறிஸ்தவர்களுக்கு பைபிளும், முஸ்லிம்களுக்கு திருக்குரானும், சீக்கியர்களுக்கு குரு கிரந்த் சாகிப்பும் இருக்கிறது. இதுபோல, அரசு நிர்வாகத்துக்கு அரசியலமைப்பு சட்டம்தான் புனித நூல் என்பது மட்டுமல்ல, அச்சாணியாகவும், இயங்கு சக்தியாகவும் இருக்கிறது.

நாடு குடியரசாக மாறுவதற்கு முன்பே அரசியலமைப்பு சட்டம் வகுக்கப்பட்டுவிட்டது. அரசியல் சட்டத்தை வகுக்க அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டு இருந்தது. இதில், அரசியல் சட்டத்தின் வரைவு குழு தலைவராக டாக்டர் அம்பேத்கர் இருந்தார். பல்வேறு துறைகளை சார்ந்த 299 நிபுணர்களும் இடம் பெற்றிருந்தனர். அம்பேத்கர் தலைமையிலான வரைவு குழு தயாரித்த அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாள்தான் குடியரசு தினமாக அறிவிக்கப்பட்டது. இந்த அரசியலமைப்பு சட்டம் நெகிழாத்தன்மையும், நெகிழ்ச்சி தன்மையும் ஒருங்கே கொண்டது. இதை வகுக்கும் போதே எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கும் பிரிவு 368 வழிகளைக்காட்டியுள்ளது. இதுவரை 106 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கூட்டாட்சியும், ஒருமுகத்தன்மையும் கொண்ட ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்தை நடத்த உறுதுணையாக அரசியலமைப்பு சட்டம் இருக்கிறது. நமது அரசியலமைப்பு சட்டம் ஒரு நீண்ட சட்டமாகும். இதில் மொத்தம் 25 பிரிவுகள், 13 அட்டவணைகள், 106 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள் மற்றும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 369 சொற்கள் அடங்கியிருக்கிறது. உலகிலேயே அதிக நீளமான அரசியலமைப்பு சட்டம் நடைமுறையில் இருக்கும் நாடு அலபாமா. அதற்கு அடுத்து 2-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.

இதுபோல, பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படத்தக்க அளவிலான இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாகி 75 ஆண்டுகள் பூர்த்தியானதை கொண்டாடும் வகையில், நாடாளுமன்றத்தில் 2 நாட்கள் சிறப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் வரலாற்றையும், பெருமையையும், புகழையும் மட்டும் பறைசாற்றி நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தால் மிகவும் மேன்மையாக அமைந்திருக்கும். ஒரு சில உறுப்பினர்கள் இந்த நாளின் சிறப்பை கருத்தில் கொண்டு, அரசியலமைப்பு சட்டத்தின் உயர்வைப் பற்றி பேசினார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், பிரதமர் நரேந்திரமோடியும் சரி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும் சரி, பெரும்பாலான தலைவர்களும் சரி, அரசியல் ரீதியான கண்டன கணைகளை வீசுவதற்காகவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டார்கள்.

பிரியங்கா இந்த கூட்டம் இரட்டை கணக்கு வகுப்பு நடந்ததுபோல மிகவும் போர் அடித்தது என்று கூறியது சரியான கணிப்பாக இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திரமோடி முன்மொழிந்த, "அரசும், குடிமக்களும் கடமையை உணர்ந்து செயல்படவேண்டும். வளர்ச்சியின் பலன்கள் அனைவரையும் சென்றடையவேண்டும். ஊழல் அறவே ஒழிக்கப்படவேண்டும். நாட்டின் பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்ளவேண்டும். அடிமை மனநிலையில் இருந்து விடுபடவேண்டும். வாரிசு அரசியலை ஒழிக்கவேண்டும். அரசியலமைப்பு சட்டத்துக்கு மதிப்பளிக்கவேண்டும். மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படக்கூடாது. பெண்கள் வளர்ச்சியில் உலகுக்கே முன் மாதிரியாக செயல்படவேண்டும். மாநிலங்கள் வளர்ச்சியடையவேண்டும். ஒரே பாரதம் - உன்னத பாரதம் என்ற இலக்குடன் முன்னேறவேண்டும்" என்ற 11 தீர்மானங்களும், இந்த 75-வது ஆண்டில் ஒரு முத்தாய்ப்பாக இருந்தது.

Read Entire Article