அரச சிம்மாசனத்தில் அமரப்போகும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்

2 hours ago 2

ஜாம்நகர்,

குஜராத் மாநிலம் ஜாம்நகர் (நவாநகர்) சமஸ்தானத்தின் மன்னராக சத்ருசல்யாசிங் ஜடேஜா உள்ளார். இவர் தனது வாரிசாக தனது மருமகனும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான அஜய் ஜடேஜாவை (வயது 53) நேற்று அறிவித்தார்.

அஜய் ஜடேஜாவின் தந்தை தவுலத்சிங்ஜி ஜடேஜாவும், மன்னர் சத்ருசல்யா சிங் ஜடேஜாவும் உறவினர்கள் ஆவர். அந்தவகையில் அஜய் ஜடேஜாவை தனது வாரிசாக மன்னர் சத்ருசல்யாசிங் ஜடேஜா நியமித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 'தசரா பண்டிகை, பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்து திரும்பிய நாளைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. அந்த தசராவாகிய இன்று (நேற்று) எனது வாரிசாக ஏற்றுக்கொண்ட அஜய் ஜடேஜாவுக்கு நன்றி. இதன் மூலம் எனது இக்கட்டான பிரச்சனைகளில் ஒன்றுக்கு தீர்வு கிடைத்துள்ளதால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என குறிப்பிட்டு இருந்தார். ஜாம்நகர் மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை அஜய் ஜடேஜா ஏற்றுக்கொண்டது உண்மையிலேயே அதன் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும் அவர் கூறியிருந்தார்.

அஜய் ஜடேஜா இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 1992 முதல் 2000 ஆண்டு வரை விளையாடி உள்ளார். மொத்தம் 15 டெஸ்ட் மற்றும் 196 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அஜய் ஜடேஜா விளையாடி உள்ளார். தனது அசாதாரண பீல்டிங் திறமையின் மூலம் அனைவராலும் நன்கு அறியப்பட்ட அஜய் ஜடேஜா, பல்வேறு தொடர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி உள்ளார்.

தொடர்ந்து சில பாலிவுட் படங்களில் நடத்து உள்ள அஜய் ஜடேஜா, சில தொலைக்காட்சி சேனல்களில் வெளியான தொடர்களிலும் பங்கேற்றுள்ளார். 2023-ம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக அஜய் ஜடேஜா நியமிக்கப்பட்டிருந்தார். கிரிக்கெட் தவிர்த்து அஜய் ஜடேஜாவின் குடும்பம் அரசியலிலும் கொடி கட்டி பறந்தது. அவரது தந்தை தவுலத்சிங்ஜி ஜடேஜா மூன்று முறை ஜாம்நகர் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

Read Entire Article