அரங்கமா நகருளானே பகுதி – 1

2 hours ago 2

“ரங்கநாதன் என்னும் நான், ராமனாகிய உன்னைப் பார்ப்பது கண்ணாடியில் என்னைப் பார்ப்பது போலத்தான்” என்று ராமனை மனதிற்குள் நினைத்தபடி ரங்கநாதர் சயனித்திருந்தார். அயோத்தி நகரின் சரயு நதிக்கரையிலுள்ள கோயிலின் கர்ப்பகிரகத்தில் அப்படி சயனித்திருப்பது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.பட்டாபிஷேகம் விமரிசையாக நடந்து முடிந்த மறுநாள், ரங்கநாதரை தரிசிக்க.ராமனும் சீதாவும் கோவிலுக்குள் நுழைந்தார்கள். ரங்கநாதர் நினைத்ததால் ராமன் வந்தானா? இராமன் வந்ததினால் ரங்கநாதருக்கு நினைவு வந்ததா? இருவருக்குமே மெல்லிய புன்னகை உதித்தது.

ராமனையும் சீதாவையும் ஒருங்கே பார்த்ததில் ரங்கநாதர் உற்சாகமானார். ராமனும் சீதையும் நமஸ்கரித்தார்கள்.சீதா! இங்கு பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாதர்தான் உன்னை நான் மணம் முடிக்கவும், பதினான்கு வருடம் வனவாசம் வெற்றியுடன் முடித்து திரும்பவும், ராவணனை வதம் புரியவும், மீண்டும் நாம் இருவரும் இணையவும் அருளியவர்.”ரங்கநாதரை ராமன் மெய்யுறுக கைகூப்பி வணங்கினான். அவன் வணங்குகையில் ராமனே ராமனை வணங்குவது போல சீதாவிற்குத் தோன்றியது.ரங்கநாதர் சந்நதியில் ராமனும் சீதாவும் மீண்டும் ஒருமுறை மாலை மாற்றிக் கொண்டார்கள். ‘‘சீதா! மீண்டும் ஒருமுறை உனக்கு மாலையிட்டது மகிழ்ச்சி. அதுவும் எந்த வில்லையும் உடைக்காமல்!”

சீதா நாணத்தில் சிவந்தாள். பெருமையும் சந்தோஷமும் ஒன்று சேர, ‘‘என் ராமன்! என் ராமன்!” என்று இராமனின் கைகளைக் கோர்த்துக்கொண்டு கோவிலை வலம் வந்தாள்.சரயு நதிக்கரையை பார்த்தபடி அமைந்துள்ள கோவிலின் வசந்த மண்டபத்தை ராமனும் சீதாவும் அடைந்தார்கள்.மண்டபத்தில் வசிஷ்டர், இலக்குவன், பரதன், சத்ருக்னன், அனுமன், விபீஷணன், அங்கதன் என எல்லோரும் குழுமியிருந்தார்கள்.ராமனையும் சீதாவையும் ஒருங்கிணைந்து பார்த்த அனைவரும் வாழ்த்தொலி முழங்கினார்கள்.

ராமன் வசிஷ்டரை வணங்கி ‘‘எங்கள் குல குருவே! சூரிய குலத்தில் உதித்த அனைத்து அரசர்களும், இங்கே பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாதரை குலதெய்வமாக போற்றி வழிபட்டவர்கள். ரங்கநாதர் சத்திய லோகத்தில் உதித்ததையும், அங்கிருந்து அயோத்திக்கு எழுந்தருளிய வரலாற்றையும் தங்களின் திருவாய் மொழியில் கேட்க பிரியமாய் உள்ளோம்.” என்றான். வசிஷ்டர் ரங்கநாதர் இருந்த திசையை நோக்கி கைகூப்பித் தொழுதார். பின், சொல்லத் துவங்கினார்.

“சிவபெருமான் நாரதருக்கு உரைத்த ரங்கநாதர் சரிதத்தை. உங்களுக்குச் சொல்வது எனக்கு புண்ணியம். கேட்கிற உங்களுக்கும், புண்ணியமும் வளமும் வரட்டும்.பாற்கடலில், ஆதிசேஷன் மேல் ஸ்ரீமன் நாராயணன் பள்ளி கொண்டிருந்தார். ஒரு இனிய நாளில், உலகத்தை சிருஷ்டிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. அவர் எண்ணிய மாத்திரத்திலேயே அவரின் உந்தியிலிருந்து, நீண்ட தண்டுடன் கூடிய ஒரு தங்கத்தாமரை மலர்ந்தது.

அந்தத் தாமரையின் மேல் நான்கு முகத்துடன் பிரம்மன் தோன்றினார். தோன்றிய பிரம்மனுக்கு தான் யார் என்பதோ எதற்காக தான் தோன்றியிருக்கிறோம் என்பதோ தெரியவில்லை. அந்தச் சமயத்தில், நாராயணன் ஒரு அன்னப்பறவையின் வடிவில் பிரம்மன் எதிரில் தோன்றினார். பிரம்மனுக்கு, அன்னப்பறவையின் வடிவத்தில் நாராயணன் வந்திருப்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. நான் யார்? நீ யார்? இங்கு என்ன நடக்கிறது? என பிரம்மன் வினவ, அன்னப்பறவை ‘‘ஹரி” என்று ஒற்றைச் சொல்லை மட்டும் கூறியது.பிரம்மன் தன்னுடைய பிறப்பின் நோக்கம் என்ன? தான் செய்ய வேண்டிய செயல்கள் என்ன ? என்று கேள்விகளை அடுக்கினார்.‘ஓம்’ என்ற இரண்டாவது சொல்லை சொல்லிவிட்டு அன்னப் பறவை மறைந்து விட்டது.

பிரம்மன் தனக்குச் சொல்லப்பட்ட ‘ஓம்’ என்ற சொல்லை ஜபித்தபடி தவம் செய்ய முடிவெடுத்தார். நாராயணன் அவர் மனதில் தோன்றி அந்த முடிவை எடுக்க வைத்திருக்க வேண்டும்.
பல வருடங்கள் தவத்தில் ஆழ்ந்தார். ஒரு நாள் கண் திறந்தார். ‘பூஹு’ என்று சொல்ல பூலோகம் தோன்றியது. மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். ஒரு நாள் கண் திறந்தார். ‘புவஹ’ என்று சொன்னார். வானம் தோன்றியது.

மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். கண் திறந்தார். ‘சுவஹ’ என்று கூறினார்.. சொர்க்க லோகம் உண்டாயிற்று. மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். ‘மஹஹா’ என்று கூறினார். வேதங்கள் பிரம்மனின் கைகளில் வந்தடைந்தன. வேதங்கள் தோன்றுவதில்லை. வேதங்கள் பிரபஞ்சத்தில் என்றும் இருப்பவை. வேதங்கள் தன்னை வந்தடைந்ததும், உலகை
சிருஷ்டிக்க பிரம்மன் துவங்கினார்.

இதை அறிந்த நாராயணன் ஒரு திருவிளையாடலை நிகழ்த்த எண்ணினார். தனது காது குரும்பையிலிருந்து மது, கைடபர் எனும் இரண்டு அரக்கர்களை உருவாக்கினார். அரக்கர்கள் இருவரும் பிரம்மனிடம் இருந்து வேதங்களைப் பறித்துச் சென்று விட்டார்கள். வேதங்கள் இன்றி தன்னால் படைப்புத் தொழிலை செய்ய இயலாது என்பது புரிந்தது. பிரம்மன், தாமரையிலிருந்து தண்டின் வழியாக கீழே இறங்கி பெருங்கடலை அடைந்தார்.

என்ன செய்வது என்று அறியாத நிலையில் ‘தந்தையே!’ என்று குரலெழுப்பினார். அந்தக் கணமே ஒரு மீன் கடலில் இருந்து துள்ளி எழுந்தது. ‘‘நானே உன் தந்தை! வேதங்களை உனக்கு நான் மீட்டுத் தருகிறேன்.” என்று மீன் உருவிலிருந்து நாராயணன் கூறினார். பின் குதிரை முகத்துடன் ஹயக்ரீவராக அவதாரமெடுத்து மது, கைடப அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். பிரம்மன் ஒரு குருவின் வழிகாட்டுதல் இன்றி வேதங்களைக் கற்கத் துவங்கியது தவறான செயல். அதை உணர்த்தவே நாராயணன் அரக்கர்களை உருவாக்கி வேதங்களைக் கவரச் செய்ததாக பிரம்மனிடம் உரைத்தார். பிரம்மன் தவறுக்கு வருந்தினார். நாராயணன், அன்னப்பறவை உருவத்தில் அளித்த பிரணவ மந்திரத்தை தவம் செய்ததினால் தான், மீண்டும் வேதங்கள் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

ஹயக்ரீவர் பிரம்மனுக்கு உலகத்தை சிருஷ்டிக்க ஆசீர்வதித்தார். மீண்டும் பிரம்மன் பரம்பொருளைத் துதித்து பாற்கடலின் கரையில் தவமியற்றினார். தவத்தின் இறுதியில் நாராயணன் ஆமை வடிவில் காட்சி தந்தார்.கூர்ம வடிவத்தில் வந்த நாராயணன் பிரம்மனை பார்த்து,” “உன் தவத்தை மெச்சினோம். வேண்டும் வரம் என்ன?” என்று கேட்டார். பிரம்மன் ‘‘நீங்கள் முதல் முறை அன்னப்பறவையாக தோன்றினீர்கள்.

இரண்டாம் முறை ஒரு மீனாக வடிவெடுத்தீர்கள். மூன்றாம் முறை குதிரை முகத்துடன் ஹயக்ரீவராக உதித்தீர்கள். இப்பொழுது ஆமை வடிவத்தில் தோன்றியுள்ளீர்கள். பறவையாய், நீரில் வாழ்வனவாய், விலங்காய் தோன்றும் நீங்கள், உங்களுக்கு என்று இருக்கும் வடிவுடன் எனக்கு காட்சி தந்து அருள வேண்டும்!” என்று இறைஞ்சினார்.

‘‘பிரம்மனே! நான் குதிரை வடிவில் தோன்றியபோது, அதன் கணைப்பில் உனக்கு வேதத்தை போதித்தேன். என் நிஜ வடிவை நீ காண வேண்டுமெனில் எட்டெழுத்து மூல மந்திரத்தை உனக்கு உபதேசிக்கிறேன் என்று கூறி , பிரம்மன் காதினில் ‘‘ஓம் நமோ நாராயணாய” என உரைத்தார். அம்மந்திரத்தை ஓதியபடி பிரம்மன் மீண்டும் தவத்தில் ஆழந்தார். ஆயிரம் வருடங்கள் கடந்தன. நாராயணன் பிரம்மனின் தவத்தை மெச்சினார்.

(தொடரும்)

கோதண்டராமன்

The post அரங்கமா நகருளானே பகுதி – 1 appeared first on Dinakaran.

Read Entire Article