ராணிப்பேட்டை: அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து வாலாஜா சென்ற சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அரக்கோணத்தில் இருந்து வாலாஜாவுக்கு கார்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் நிலையத்தில் சரக்கு கையாளும் பாதையில் யார்டுக்கு செல்லும்போது ரயில் தடம் புரண்டது. தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய சரக்கு ரயிலின் 3 பெட்டிகளை சரி செய்யும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தால் சென்னை பெங்களூரு வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை – பெங்களூரு செல்லும் ஹூப்ளி எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை லால்பாக், திருவனந்தபுரம் விரைவு ரயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருத்தணி செல்லும் மின்சார ரயில்களை திருவள்ளூர் வரை மட்டுமே இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The post அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சென்னை – பெங்களூரு இடையே ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.