சென்னை: புலம்பெயர்வு குறித்த ஐநா மன்றத்தின் சர்வதேச ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளின் கலந்தாய்வுக் கூட்டம் ஐநா மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் தலைவரும், கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவருமான பொன்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தொழிலாளர்கள் தரமான வேலை, நல்ல சம்பளம் என்ற நோக்கத்தோடு பல்வேறு நாடுகளுக்கு ஆண்டாண்டு காலமாக புலம் பெயர்கின்றனர்.
அப்படி புலம் பெயரும் கட்டுமானத் தொழிலாளர் உள்ளிட்ட அமைப்புசாராத் தொழிலாளர்கள் முகவர்களால் ஏமாற்றப்பட்டு, அயல்நாடுகளுக்கு சென்ற பின்னர் உறுதி அளிக்கப்பட்ட வேலையோ, சம்பளமோ கிடைக்காமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அவருடைய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் அந்த நாட்டு முதலாளிகளால் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால் அவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர். சுற்றுலா விசாவில் அனுப்பி வைக்கப்பட்டவர்களும், அந்தந்த நாட்டின் சட்ட திட்டங்கள் அறியாத காரணத்தாலும் பல தொழிலாளர்கள் சிறைப்பட வேண்டிய கொடுமைகள் நேர்கின்றன.
இப்படிப்பட்டத் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு தமிழ்நாடு அரசு அயலகத் தமிழருக்கு என ஒரு தனித் துறையை உருவாக்கியுள்ளது. இதேபோல தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பும் நாடுகளும், வேலை வாங்கும் நாடுகளும் தொழிலாளர்களை பாதுகாக்க ஒரு சிறப்பு ஏற்பாட்டை செய்ய வேண்டும். குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்வதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் நடைமுறைப்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post அயல்நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை பாதுகாக்க அந்தந்த நாடுகள் உதவ வேண்டும்: ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பொன்குமார் வலியுறுத்தல் appeared first on Dinakaran.