டெல்லி: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து, காணொலி காட்சி வாயிலாக, இன்று திறந்து வைக்கிறார். சென்னை பரங்கி மலை, சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி, ஆந்திர மாநிலம் சூலுார்பேட்டை உட்பட 12க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மாஹே அம்ரித் பாரத் ரயில் நிலையங்களில் ஒன்றாக இருக்கும்.
ரயில் நிலையத்தை பயணிகள் எளிதாக அடையாளம் காணும் விதமாகவும், முகப்புப்பகுதியை மேம்படுத்துவது, ரயில் நிலையங்களில் குறைந்தபட்ச அடிப்படை தேவைகளை ஏற்படுத்துதல், எஸ்கலேட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, ரயில் நிலையத்தின் வடிவமைப்பு, 5-ஜி சேவை, நடைமேடைகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்துதல் என்று நீண்டகால தேவையின் அடிப்படையில் புதிய நவீன வசதிகளுடன் ரெயில் நிலையங்கள் புத்துருவாக்கப்பட்டுள்ளன.
The post அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.