அம்மையநாயக்கனூர் பள்ளியில் சமையலறை மேல்பூச்சு இடிந்து விழுந்தது

5 hours ago 1

*நள்ளிரவு நேரம் என்பதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

நிலக்கோட்டை : நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூரில் சுமார் 75 ஆண்டுகள் பழமையான அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6 முதல் 12ம் வகுப்புகள் வரை உள்ள இப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டபட்ட சமயலறை மூலம் தான் மதிய உணவு சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது, இச்சமையலறையில் கடந்த அதிமுக ஆட்சியில் 2019- 2020 ஆண்டு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டது, ஆனால் பராமரிப்பு வேலையை தரமாக செய்யாததால் கடந்த சில மாதங்களாக சமையலறையின் மேல்பூச்சுகள் உதிர்ந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

இந்நிலையில் இப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு சமையலறை கட்டிட மேல்பூச்சின் ஒரு பகுதி மேலும் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மழையில் நனைந்து சேதமடைந்ததது.

மேலும் நள்ளிரவு நேரத்தில் இடிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.தற்போது சமையலறை இல்லாததால் மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமையலறை கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அம்மையநாயக்கனூர் பள்ளியில் சமையலறை மேல்பூச்சு இடிந்து விழுந்தது appeared first on Dinakaran.

Read Entire Article