அம்மையநாயக்கனூர் 8வது வார்டில் கழிவுநீர் கால்வாய் வசதியுடன் சாலை அமைத்து தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

1 month ago 5

நிலக்கோட்டை, அக். 15: அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 8வது வார்டில் கழிவுநீர் கால்வாய் வசதியுடன் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்குட்பட்ட 8வது வார்டு ஏ.புதூரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் கொடைரோடு, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் மழைநீர் இத்தெருவில் உள்ள சிமெண்ட் சாலையின் பள்ளங்களில் தேங்கி கிடக்கிறது. மேலும் இப்பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், மழைநீரும் சேர்ந்து குளம்போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகும் கூடாரமாக மாறி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நீண்ட நாட்களாக தேங்கும் தண்ணீரால் இத்தெருவின் சாலை பாசனம் பிடித்து புற்கள் புதர்போல் மண்டி வளர்ந்து விஷஜந்துகள் நடமாட்டத்திற்கும் வழிவகுக்கிறது.

எனவே தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் இப்பகுதியில் உடனடியாக கழிவுநீர் கால்வாயுடன் கூடிய சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த நாகேந்திரன் (46) கூறியதாவது: அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு எதிரே 8வது வார்டில் உள்ள இப்பகுதி சபிக்கபட்டது போல பல ஆண்டுகளாக சரியான கழிவுநீர் கால்வாய் வசதியோ, சாலை வசதியோ அமைத்து தரவில்லை. இதனால் நடுத்தெருவிலே கழிவுநீர் தேங்கி புற்கள் முளைத்து புதர்மண்டி தெருவில் நடந்து கூட செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. கொசு தொல்லையால் டைபாய்டு, மலேரியா போன்ற நோய் தொற்று ஏற்பட்டு அவதியடைந்து வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கூடிய சாலை வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

The post அம்மையநாயக்கனூர் 8வது வார்டில் கழிவுநீர் கால்வாய் வசதியுடன் சாலை அமைத்து தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article