'அம்... ஆ' திரைப்பட விமர்சனம்

5 hours ago 2

சென்னை,

அம்...ஆ என்பது தாமஸ் செபாஸ்டியன் இயக்கிய மலையாள மர்மத் திரில்லர் நாடகமாகும். இதில் திலீஷ் போத்தன் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். மேலும் தேவதர்ஷினி, மீரா வாசுதேவ், ஜாபர் இடுக்கி, முத்துமணி மற்றும் அலென்சியர் லே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காபி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் விசாரணை கோணத்தில் தாய்மையை கொண்டாடும் படமாக உருவாகி உள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் தாமஸ் செபஸ்டியன் இயக்கிய 'அம்... ஆ' திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

தாய்க்கும், சேய்க்கும் இடையேயான பாச போராட்டமே இக்கதை. கேரளாவில் உள்ள ஒரு மலையோர கிராமப்பகுதிக்கு சாலை போடும் அதிகாரி என்று கூறிக்கொண்டு வருகிறார் திலீஷ் போத்தன். அங்கு கைக்குழந்தையுடன் வசிக்கும் தேவதர்ஷினியை பார்த்து, அவரை பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறார். திலீஷ் போத்தனை பார்த்து பதறும் தேவதர்ஷினி, குழந்தை தன்னிடம் இருந்து பறிபோய் விடக்கூடாது என்று அச்சம் கொள்கிறார். குழந்தையை பாதுகாக்க போராடுகிறார். திலீஷ் போத்தனை கண்டு தேவதர்ஷினி பதறுவது ஏன்? தேவதர்ஷினியிடம் இருக்கும் குழந்தையின் பின்னணி என்ன? என்பதே மீதி கதை.

இப்படியும் நடிக்க முடியுமா? என்ற ரீதியில் அழுத்தமான நடிப்பால் முத்திரை பதித்துள்ளார் தேவதர்ஷினி. குழந்தையை காப்பாற்ற அவர் போராடும் இடங்களில் உயிரூட்டமான நடிப்பால் 'அடடா' சொல்ல வைக்கிறார். உடல்மொழியில் வில்லத்தனத்தை காட்டி, உணர்வு ரீதியான நடிப்பை கொட்டியுள்ளார் திலீஷ் போத்தன். வாடகைத்தாயாக வரும் மீரா வாசுதேவின் நடிப்பில் அனுதாபம் பெருக்கெடுக்கிறது. ஊர் தலைவராக வரும் ஜாபர் இடுக்கியின் 'லொடலொட' பேச்சு சுவாரசியம்.

ரவி, சுருதி ஜெயன், மாலா பார்வதி, ஜெயராஜன், நவாஸ் வல்லிக்கண்ணு, ரகுநாத் பல்லேரி என அனைவருமே எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அனிஷ்லாலின் ஒளிப்பதிவில் கேரளாவின் அழகு, உள்ளத்தை கொள்ளை கொள்கிறது. கோபி சுந்தரின் இசை வருடல். யூகிக்க முடியாத காட்சிகள் பலம். சில இடங்களில் நாடகத்தனம் எட்டிப்பார்ப்பது பலவீனம்.

வாடகைத்தாய் சந்திக்கும் இன்னல்களை உணர்ச்சி குவியலாக திரைக்கதையில் கொட்டி திரில்லரும், சென்டிமெண்டும் கலந்த கலவையாக கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார், இயக்குனர் தாமஸ் செபஸ்டியன். கிளைமேக்ஸ் காட்சியில் கண்கள் குளமாகின்றன.

Read Entire Article