மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த ஓராண்டாகவே யுத்தங்களும், தாக்குதல்களும் தொடர்கதையாக மாறி வருகின்றன. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் பகுதிகளை குறி வைத்து பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் ஒரு பெரிய யுத்தத்திற்கே வழிவகுத்து விட்டது. இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வான் மற்றும் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக ஹமாஸூக்கு ஆதரவாக செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை குறி வைத்து லெபனான் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதனால் காசா, லெபனான் பகுதிகளில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். இந்நிலையில் இந்த யுத்தத்தில் ஈரானும் தனது பங்கிற்கு ஹமாஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து களமிறங்கியது. விளைவு இஸ்ரேல் – ஈரான் மோதலும் தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதியன்று சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து நடந்த தாக்குதல்களில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் ஆகியோர் உயிரிழந்தனர். கடந்த 1ம் தேதியன்று இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
அதற்கு பதிலடியாக தற்போது ஈரானின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து இஸ்ரேலின் 100 போர் விமானங்கள் ஈரான் மீது நடத்திய துல்லிய தாக்குதலில், ஈரானிய ராணுவ ரேடார்கள் சேதம் அடைந்தன. மேலும் ஈரானின் நட்பு நாடான சிரியாவின் ரேடார் அமைப்புகளும் குண்டு வீசி அழிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ச்சியாக சென்று ஈரானின் ஏவுகணை உற்பத்தி ஆலைகள், ஆயுத கிடங்குகளை தரைமட்டமாக்கியுள்ளன. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்க ஈரானும் தயாராகி வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் அதிகரித்து வரும் மோதலை கைவிடுமாறு பல நாடுகளும் ேகாரிக்கை விடுத்த வண்ணம் உள்ளன. மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் ஈரானுக்கு ஆதரவாகவும் கைகோர்க்கும் நிலையில், அங்கு போர் மூளும் அபாயங்களும் உள்ளன. இந்நிலையில் ‘நீங்கள் தாக்கியதற்கு பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியாயிற்று. எனவே போரை கைவிட வேண்டும்’ என அமெரிக்கா ஈரானை மட்டும் வலியுறுத்தி வருகிறது.
இஸ்ரேலை மீண்டும் சீண்டினால் நிலைமை மோசமாகும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஈரான் இந்த ஆண்டு மட்டுமே இருமுறை இஸ்ரேலை நேரடியாக தாக்கியுள்ள நிலையில், மீண்டும் தாக்குதல் நடத்தினால் தேவையற்ற போர் மூளும் அபாயங்கள் உள்ளன. இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் அணு ஆயுதங்களும், வெடி பொருட்களும், ஏவுகணை தொழிற்சாலைகளும் உலகத்தையே அச்சுறுத்தி வருகின்றன.
இஸ்ரேல் தன்னை தற்காத்து கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது, இத்தகைய தாக்குதல்கள் மீண்டும் நடக்கும் அபாயங்கள் உள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் தாக்குதல்கள் காரணமாக அப்பாவி உயிர்கள் பலியாவதும் வருந்தத்தக்கது. நாடுகள் அணு ஆயுத கிடங்குகளை குறி வைத்து தாக்குதல் நடத்தினாலும், யுத்தம் என வரும்போது அப்பாவி மக்களின் உயிர்களும் காவு கொள்ளப்படுகின்றன. தேவையற்ற பதற்றம், பொருளாதார சீரழிவுகளும் அந்நாடுகளில் தொடர்கதையாகி வருகின்றன. எனவே அமைதி ஒன்றே தீர்வு என்பதை ஈரான், இஸ்ரேல், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகள் உணர்வதே நல்லது.
The post அமைதி திரும்புமா? appeared first on Dinakaran.