அமைதி, கட்டுப்பாட்டுடன் மாநாட்டிற்கு வாருங்கள்: கட்சியினருக்கு அன்புமணி அழைப்பு

1 day ago 2

சென்னை: அமைதி, கட்டுப்பாட்டுடன் மாநாட்டிற்கு வாருங்கள் என கட்சியினருக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: மாமல்லபுரத்தில் வரும் 11ம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு எந்தவித விமர்சனத்திற்கும் ஆளாகிவிடக் கூடாது. நீங்கள் ராணுவத்திற்கு இணையான கட்டுப்பாட்டைக் கடைபிடிப்பவர்கள் என்பதை நிரூபிக்க மாநாடு ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த மாநாட்டையொட்டி சிறு சலசலப்பு கூட ஏற்படக்கூடாது. அதற்கு நீங்கள் இடம் தந்துவிடக்கூடாது. மாநாடு தொடர்பாக காவல்துறையினர் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

மாநாட்டுக்கு வரும் பாதையிலும், மாநாடு முடிந்து திரும்பும் போதும் உணவகங்கள் திறந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், வரும் போதே இருவேளைக்கான உணவு, குடிநீர் ஆகியவற்றை நிர்வாகிகள் ஏற்பாடு செய்து கொண்டு வர வேண்டும். அதேபோல், வாகனங்களை அதிவேகமாகவும், ஆபத்தான வகையிலும் இயக்குவதை தவிர்க்க வேண்டும். மாநாட்டுக்கு வரும் கடைசி தொண்டன் வரை அனைவரும் மாநாடு முடிவடைந்து பாதுகாப்பாக வீடு திரும்பி விட்டார்கள் என்ற செய்தி எனக்கு கிடைத்த பிறகு தான் நான் உறங்குவேன்.அதனால், இந்த மாநாடு தொடர்பான அனைத்து விஷயங்களையும் கண்ணாடிப் பொருள் போன்று அனைவரும் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் கையாள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றி பெறச் செய்யவும், சமூகநீதிக்கான கோரிக்கைகளை வென்றெடுக்கவும் நீங்கள் அனைவரும் அமைதி, கட்டுப்பாட்டுடன் அணிவகுத்து வரும்படி மீண்டும் ஒரு முறை அழைக்கிறேன்.

 

The post அமைதி, கட்டுப்பாட்டுடன் மாநாட்டிற்கு வாருங்கள்: கட்சியினருக்கு அன்புமணி அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article