
சென்னை,
கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர் வாடிக்கையாளர் இடையே நடந்த உரையாடலை, இந்து மதத்தின் சைவ, வைணவத்தின் புனிதச் சின்னங்களுடன் ஒப்பிட்டு, அறுவெறுக்கத்தக்க வகையில் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அமைச்சர் பொன்முடி பேசியதை வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு மிக கேவலமாகப் பேசியுள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது. இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேசிய பொன்முடி, எந்தப் பதவி வகிக்கவும் தகுதி அற்றவர். ஆனால், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்காமல், திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து மட்டும் நீக்கி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் நீடிக்க தகுதியற்ற ஒருவர், எப்படி அமைச்சர் பதவியில் இருக்க முடியும்? எனவே, பொன்முடியை வனத்துறை அமைச்சர் பதவியில் இருந்து உடனே நீக்க வேண்டும். அமைச்சர் பொன்முடி பேசியது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உண்மையிலேயே வருத்தப்பட்டால், அவரை கட்சியிலிருந்தே நீக்க வேண்டும்.
பெண்களையும், இந்து மதத்தையும் அவமானப்படுத்திய அமைச்சர் பொன்முடி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குப் பதிலாக பொன்முடியை கட்சிப் பதவியிலிருந்து மட்டும் நீக்கி கண்துடைப்பு நாடகம் நடத்துவதை ஏற்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.