அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு; ஆசிரியர் தேர்வு வாரியமே செட் தேர்வை நடத்தும்

3 weeks ago 7

சென்னை: தமிழ்நாடு உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்வது மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், சட்டக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் கீழ் உள்ள கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியுள்ள உதவிப் பேராசிரியர்களை தெரிவு செய்யும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும், 2011 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்திடும் முகவாண்மை நிறுவனமாக அரசால் நியமிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்தோடு 2023ல் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மறுசீரமைக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் பணியாளர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாடு அரசால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் மாநில தகுதித் தேர்வினை (செட்) நடத்திட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாணைக்குட்பட்டு உயர்கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழக பாட வல்லுநர்கள் மற்றும் பேராசிரியர்களை ஈடுபடுத்திக் கொண்டு மேற்கண்ட தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளிப்படைத்தன்மையுடன் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு; ஆசிரியர் தேர்வு வாரியமே செட் தேர்வை நடத்தும் appeared first on Dinakaran.

Read Entire Article