
சென்னை,
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் இயக்குநராக உள்ள நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து 30 கோடி ரூபாய் கடன் பெற்றது. அந்த கடன் தொகையை அந்த நிறுவனம் சகோதர நிறுவனங்களுக்கு திருப்பி விட்டதாகவும், இதன் மூலம் தங்களுக்கு 22 கோடியே 48 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வங்கி சார்பில் புகாரளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது 2021-ஆம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அண்மையில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
இந்த சூழலில், எழும்பூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சி.பி.ஐ. வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதால், சி.பி.ஐ. வழக்கை ரத்து செய்யக் கோரும் வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையின் முடிவில், இந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்த நீதிபதி, விசாரணையை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.