பெல்லியர் பீச்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இன்று மில்டன் என்ற அதிபயங்கர சூறாவளி தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை கடந்த 26ம் தேதி ஹெலன் புயல் தாக்கியது. இதனை தொடர்ந்து வடக்கு திசையை நோக்கி நகர்ந்த இந்த புயலானது வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா உள்ளிட்ட மாகாணங்களை கடுமையாக தாக்கியது. இதனால் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கள் ஏற்பட்டது. இதிலிருந்து மக்கள் மீண்டு வருவதற்கு முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் புளோரிடா மாகாணத்தை இன்று மில்டன் சூறாவளி தாக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது வகை-5 சூறாவளி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தம்பா விரிகுடாவில் 8 முதல் 12 அடி வரை புயல் எழுச்சி ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வெளியேறுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது இந்த பகுதியில் இதுவரை கணிக்கப்படாத அதிகப்பட்ச அளவாகும். மேலும் பரவலான வெள்ளம் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 முதல் 25 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் 38 சென்டிமீட்டர் வரை மழை எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post அமெரிக்காவை நெருங்கும் மில்டன் சூறாவளி appeared first on Dinakaran.