
நியூயார்க்,
தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஷாத்நகர் பகுதியில் வசித்து வந்தவர் பிரவீன். ராகவலு மற்றும் ரமாதேவி தம்பதியின் மகனான பிரவீன், 2023-ம் ஆண்டு ஆகஸ்டில் உயர் கல்வி படிப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். மில்வாகீ பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் 2-ம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.
அவர் படிக்கும்போதே பகுதி நேர பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் சொந்த ஊருக்கு வந்து விட்டு, ஜனவரியில் அமெரிக்காவுக்கு திரும்பியிருக்கிறார். வருகிற ஆகஸ்டில் அவருடைய படிப்பு முடிய இருந்தது. இந்நிலையில், அவர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.
இதுபற்றி அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறும்போது, நள்ளிரவில் தொலைபேசி அழைப்புகள் வந்தன. ஆனால், நாங்கள் அதனை கவனிக்கவில்லை. இதன்பின்னர் இன்று காலை மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது மறு முனையில் பேசியவர்கள், பிரவீனின் பிறந்த தேதி உள்ளிட்ட அவனுடைய தனிப்பட்ட விவரங்களை கேட்டனர். அது ஒரு போலியான தொலைபேசி அழைப்பாக இருக்கும் என நாங்கள் சந்தேகித்தோம்.
ஆனால், அவனுடைய நண்பர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அவர்களுக்கும் பிரவீன் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இதன்பின்னர், அவர்கள் வெளியே சென்று பார்த்தபோது, பிரவீன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளான். அவர்களை போலீசார் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை என கூறியுள்ளார்.
பீச்சில், தங்கியிருந்த பகுதிக்கு அருகே மர்ம நபர்களால் பிரவீன் சுடப்பட்டு உள்ளார் என கூறப்படுகிறது. இதில் சுருண்டு விழுந்து, அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, முன்பே அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.