சிம்பொனி இசை நிகழ்ச்சி: "இது எனது பெருமை அல்ல, நாட்டின் பெருமை.." - இளையராஜா நெகிழ்ச்சி

5 hours ago 2

சென்னை,

இசைஞானி இளையராஜா, வருகிற 8-ந் தேதி முதன் முறையாக மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சியை லண்டனில் நடத்த உள்ளார். 'வேலியன்ட்' (Valiant) என்னும் தலைப்பில் இசைஞானி இளையராஜா இயற்றியிருக்கும் சிம்பொனி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக முதன்முறையாக அரங்கேற்றப்பட உள்ளது. இதன் காரணமாக அவரை பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் சந்தித்து தங்களது வாழ்த்தை தெரிவித்து வந்தனர்.

அதன்படி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன், வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை மந்திரி எல்.முருகன், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இசைஞானி இளையராஜா, "சிம்பொனி இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும். ரசிகர்களைப் போலவே நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உலகிலேயே தலைசிறந்த இசை திருவிழாவாக நடைபெற உள்ளது. இது எனது பெருமை அல்ல. நாட்டின் பெருமை... Incredible இந்தியா மாதிரி, நான் Incredible இளையராஜா.

உங்களுக்கே அவ்வளவு மகிழ்ச்சி இருக்கும்போது..எனக்கு எவ்ளோ மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் நான். உங்களின் பெருமையைதான் லண்டனில் சேர்க்கப் போகிறேன். இதுக்கு மேல யாரும் வரப்போறதும் இல்லை. வந்ததும் இல்லை" என்று அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக இசைஞானி இளையராஜா லண்டன் புறப்பட்டுச் சென்றார். 

Read Entire Article