
விமான பயணம் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு வரை வசதி படைத்தவர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. மற்றவர்கள் ஆகாயத்தில் விமானம் பறப்பதை பார்க்க மட்டுமே முடிந்தது. அப்போதெல்லாம், பள்ளிக்கூடங்களில் விமான நிலையத்துக்கு சுற்றுலா அழைத்துச்சென்று விமானம் தரையிறங்குவதையும், உயர பறக்க தொடங்குவதையும் மாணவர்களுக்கு காட்டுவார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. கடந்த 1-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி ஆலோசனையின்பேரில், மாவட்ட செயலாளர் நல்லசிவம், ஒன்றிய செயலாளர் சிவபாலன் ஆகியோர் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் தொட்டக்கொம்பு மலை கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் இருந்து 33 மாணவர்கள், 6 ஆசிரியர்களையும் அழைத்து வந்தனர்.
குறைந்தவிலை கட்டணத்தில் விமான சேவை வந்ததாலும், மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்ததாலும் இப்போது விமான பயணம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமல்ல, நடுத்தர மக்களுக்கும் ஏன், ஏழை-எளிய மக்களின் அவசர பயணத்துக்கும் சாத்தியமான ஒன்றாகிவிட்டது. இதற்கு காரணம் 'உதான்' விமான சேவை திட்டம்தான். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் விமான பயணம் அனைவருக்கும் ஏற்றவகையிலான கட்டணத்தில் இருக்கவேண்டும், அனைத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் விமானப்போக்குவரத்தை தொடங்க விமான நிலையங்கள் அமைக்கப்படவேண்டும் என்பதும்தான்.
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த இந்த திட்டம் 2017-ல் தொடங்கப்பட்டது. அப்போது அவர், 'காலில் ரப்பர் செருப்பை அணிந்துகொண்டு செல்லும் சாதாரண மனிதர்களை விமானத்தில் பார்க்கவேண்டும் என்பதுதான் எனது கனவு' என்றார். குறைந்த கட்டண விமானத்தில் அதாவது ஒரு மணி நேர பயணத்துக்கு அந்த விமானத்தில் உள்ள 50 சதவீத இடங்களுக்கு ரூ.2,500 கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டண சலுகைக்கு மத்திய அரசாங்கம் விமான நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் சலுகைகள் வழங்குகிறது. ஆனால் இந்த விமானங்களில் உணவு இலவசமாக வழங்கப்படாது, பணம் செலுத்திதான் உணவு வாங்கவேண்டும். அங்கு மட்டுமல்ல விமான நிலையங்களில் உள்ள உணவு விடுதிகளிலும் பொருட்களின் விலை விமானம் பறக்கும் உயரத்துக்கு இணையாக இருக்கிறது.
சென்னை விமான நிலையத்தில் 3 இட்லி மற்றும் பில்டர் காபி விலை 352 ரூபாய் 38 பைசா, ஒரு மசால் தோசை மற்றும் காபி விலை 428 ரூபாய் 57 பைசா, மெதுவடை 89 ரூபாய் 99 பைசா, குடிநீர் பாட்டில் விலை ரூ.70, இதற்கு மேல் ஜி.எஸ்.டி. வரியும் உண்டு. ஆனால் இந்த கவலை இனி இல்லை. குறைந்த விலை உணவகமான 'உதான் யாத்ரி கபே' கடந்த டிசம்பர் மாதம் கொல்கத்தா விமானநிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்தது. அந்த வரிசையில் 2-வது உணவகம் கடந்த வாரம் சென்னை விமானநிலையத்தில் மத்திய விமானப்போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடுவால் திறக்கப்பட்டது. இந்த உணவகத்தில் ஒரு கப் டீ ரூ.10, தண்ணீர் பாட்டில் ரூ.10, காபி, சமோசா மற்றும் அன்றைய தினம் விற்கப்படும் இனிப்பு பலகாரம் ரூ.20 என்ற விலையில் விற்கப்படுகிறது. இது பயணிகளுக்கு பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த யாத்ரி கபேயில் இட்லி, தோசை மற்றும் உணவு வகைகளையும் விற்றால் ரொம்ப நல்லது என்பது பயணிகளின் கருத்தாக இருக்கிறது. விரைவில் மற்ற விமான நிலையங்களிலும் இதுபோன்ற யாத்ரி கபே திறக்கப்படும் என்ற மந்திரியின் அறிவிப்பு நிறைவேறப்போகும் நாளைத்தான் பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.