அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்: குஜராத்தை சேர்ந்த 33 பேர் அகமதாபாத் வந்தனர்

3 months ago 11

அகமதாபாத்,

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதன்படி, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை டிரம்ப் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், இந்தியாவை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் 104 பேரை சுமந்து கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் புறப்பட்டது.

அவர்களுடைய விமானம், பஞ்சாப்பின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் நேற்று மதியம் 1.55 மணியளவில் தரையிறங்கியது. இதில், அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப்பை சேர்ந்த 30 பேர், மராட்டியம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களை சேர்ந்த தலா 3 பேர் மற்றும் சண்டிகாரை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 104 பேர் நாடு கடத்தப்பட்டனர்.

இந்நிலையில், அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வந்த குஜராத்தை சேர்ந்த 33 பேர் இன்று காலை அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தனர். அகமதாபாத்தில் தரையிறங்கிய 33 பேரில் குழந்தைகள் மற்றும் பெண்கள் அடங்குவர் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விமான நிலையம் வந்த அவர்கள் போலீஸ் வாகனம் மூலம் அந்தந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் மெஹ்சானா, காந்திநகர், பதான், வதோதரா மற்றும் கேடா மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, நாடுகடத்தப்பட்ட குஜராத்திகளுக்கு அம்மாநில முன்னாள் துணை முதல்-மந்திரி நிதின் படேல் அனுதாபம் தெரிவித்தார். நாடுகடத்தப்பட்ட அவர்கள் வேலை அல்லது தொழில் தேடி வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர் எனவும், அவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

Read Entire Article