அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட தீவிரவாதி ராணா திகார் சிறையில் அடைப்பு: காவலில் எடுத்து விசாரிக்கிறது என்ஐஏ

1 week ago 3

புதுடெல்லி: அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா டெல்லி திகார் சிறையில் உயர் பாதுகாப்பு வார்டில் அடைக்கப்பட்டார். இனி, தேசிய புலனாய்வு துறை ராணாவை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது.

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அரபிக் கடல் வழியாக ஊடுருவிய பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 10 தீவிரவாதிகள் பல இடங்களில் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 166 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். 9 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், உயிருடன் பிடிப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் கடந்த 2012ல் தூக்கிலிடப்பட்டார். உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில், பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட கனடா குடியுரிமை பெற்ற தஹாவூர் ராணா மூளையாக செயல்பட்டது என்ஐஏ விசாரணையில் கண்டறியப்பட்டது.

அமெரிக்காவின் சிகாகோவில் கைது செய்யப்பட்ட ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த நீண்ட காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதே போல, பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு ராணாவை நாடு கடத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ராணா தரப்பில் பல்வேறு மேல்முறையீடுகள் செய்யப்பட்டன. ராணாவின் கடைசி வாய்ப்பாக தாக்கல் செய்ய மேல்முறையீடு மனுவை அமெரிக்க நீதிமன்றம் கடந்த 4ம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து ராணாவை இந்தியாவுக்கு அழைத்து வர என்ஐஏ மற்றும் ரா உளவுப்பிரிவு உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் குழு அமெரிக்காவில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதைத் தொடர்ந்து, ராணாவை இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்ததும், நேற்று முன்தினம் சிறப்பு விமானம் மூலம் அவர் அழைத்து வரப்பட்டார். இந்த சிறப்பு விமானம் டெல்லி பாலம் விமான நிலையத்தில் நேற்று மாலை தரையிறங்கியது. ராணா அழைத்து வரப்படுவதைத் தொடர்ந்து டெல்லி பாலம் விமானத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், என்ஐஏ தலைமையகம் ஆகிய பகுதிகளிலும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் இருந்து ராணா நேரடியாக என்ஐஏ தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவரிடம் ஆரம்பகட்ட விசாரணைகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராணா, பின்னர் டெல்லி திகார் சிறையில் உயர்பாதகாப்பு வார்டில் அடைக்கப்பட்டார். இந்திய சிறையில் ராணாவுக்கு எந்த துன்புறுத்தல்களும் நடக்காது என அமெரிக்க நீதிமன்றத்தில் இந்தியா தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராணாவுக்காக சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு முக்கிய பங்கு இருப்பதாக என்ஐஏ சந்தேகிக்கிறது. இதனால் ராணாவை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ திட்டமிட்டுள்ளது. அப்போது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் ராணாவுக்கு உள்ள தொடர்புகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட உள்ளன.

கடந்து வந்த பாதை

  • 2008, நவம்பர் 26: பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் மும்பையில் ரயில் நிலையம், 2 சொகுசு ஓட்டல்கள், யூதர்கள் சமூக மையத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். தீவிரவாதி அஜ்மல் கசாப்பை மட்டும் மும்பை போலீசார் உயிருடன் கைது செய்தனர்.
  • 2009, ஜனவரி 13: கசாப் மற்றும் கைதான 2 இந்தியர்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியாக தஹாலியானி நியமிக்கப்பட்டார்.
  •  ஜனவரி 16: கசாப் அடைக்கப்பட்ட ஆர்தர் சாலை சிறையில் வழக்கு விசாரணை நடத்த தேர்வு செய்யப்பட்டது.
  •  பிப்ரவரி 25: வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
  •  அக்டோபர் 27: முக்கிய குற்றவாளிகளான தஹாவூர் ராணா, டேவிட் கோல்மேன் ஹெட்லி ஆகியோர் அமெரிக்காவில் எப்பிஐயால் கைது செய்யப்பட்டனர்.
  • நவம்பர் 11: ஹெட்லி, ராணாவுக்கு எதிராக டெல்லியில் என்ஐஏ வழக்கு பதிவு செய்தது.
  •  2010, மே 6: மும்பை சிறப்பு நீதிமன்றம் கசாப்புக்கு மரண தண்டனை விதித்தது. 2 இந்தியர்கள் போதிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.
  •  2011, ஜன. 9: மும்பை மற்றும் டென்மார்க்கில் தீவிரவாத செயல்களுக்கு ஆயுத உதவி செய்ததாக ராணாவுக்கு அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
  •  பிப். 21: கசாப்பின் மரண தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
  •  டிச. 24: ராணாவை நாடு கடத்த வேண்டுமென அமெரிக்காவிடம் என்ஐஏ கோரிக்கை விடுத்தது.
  •  2012, ஆக. 29: கசாப்பின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து நவம்பரில் கசாப்பின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்தார்.
  • நவம்பர் 21: கசாப் புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான்.
  •  பிப். 13: வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை சந்தித்த பின் பேட்டிஅளித்த அதிபர் டிரம்ப், ராணாவை உலகின் மிக கொடூரமான மனிதர் என்றும், இந்தியாவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார் என்றும் கூறினார்.
  •  பிப். 27: ராணா அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். அவரது மனு மார்ச்சில் நிராகரிக்கப்பட்டது.
  •  ஏப். 7: ராணாவில் சீராய்வு மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
  •  ஏப். 10: ராணா அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.

என்ன சொல்கிறது பாக்.?
ராணா மூலமாக மும்பை தாக்குதலில் பாகிஸ்தானின் பங்களிப்பை உலகிற்கு அம்பலப்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் முதல் முறையாக ராணா குறித்து மவுனம் கலைத்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘கடந்த 20 ஆண்டாக பாகிஸ்தான் குடியுரிமைக்கான ஆவணங்களை ராணா புதுப்பிக்கவில்லை. எனவே அவர் கனடா நாட்டவர் என்பது தெளிவாகிறது’ என கூறப்பட்டுள்ளது. ராணா பாகிஸ்தானியர் அல்ல என பாகிஸ்தான் கூறி வருகிறது.

The post அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட தீவிரவாதி ராணா திகார் சிறையில் அடைப்பு: காவலில் எடுத்து விசாரிக்கிறது என்ஐஏ appeared first on Dinakaran.

Read Entire Article