அமெரிக்காவின் நீண்டதூர ஏவுகணைகளை வீசி தாக்கியதால் உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த புடின் ஒப்புதல்: போர் பதற்றம் அதிகரிப்பு

1 month ago 4

மாஸ்கோ: உக்ரைன் – ரஷ்யா போர் கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய நிலையில் 1000 நாள்களை கடந்து நீடித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத, நிதி உதவிகளை அளித்து வருகிறது. போர் தொடங்கிய நாள்முதல் ரூ.5.37 லட்சம் கோடிக்கும் அதிகமான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துள்ளது. இதனால் உக்ரைனை எளிதில் கைப்பற்றி விடலாம் என போரை தொடங்கிய ரஷ்யா தற்போது அதை செயல்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் 2025 ஜனவரியில் பதவி ஏற்க உள்ளதால் உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வரும் உதவிகள் தொடருமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த அமெரிக்கா வழங்கிய சக்தி வாய்ந்த ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த பைடன் தலைமையிலான நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அனுமதிக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து கிரெம்ளின் மாளிகை “ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி அளித்திருப்பது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் செயல். இது சர்வதேச அளவில் போரை மேலும் தீவிரப்படுத்தும்” என எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனிடையே பைடன் அனுமதி அளித்த 24 மணி நேரத்தில் ரஷ்யா மீது அமெரிக்க ஏவுகணைகளை வீசி உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது. இதுகுறித்து ரஷ்ய ராணுவம் வௌியிட்ட அறிவிப்பில், “செவ்வாய்க்கிழமை அதிகாலை ரஷ்யா ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்காவின் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆறு ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணைகளை வீசி உக்ரைன் தாக்குதல் நடத்தியது. அதில் 5 ஏவுகணைகளை ரஷ்ய ராணுவம் சுட்டு வீழ்த்தியது” என தெரிவித்தது. இந்நிலையில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான ஒரு புதிய கொள்கையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ளார். இதுகுறித்து கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், “அணு ஆயுத பலம் கொண்ட எந்தவொரு நாடும் ரஷ்யா மீது எந்த வகையில் தாக்குதல் நடத்தினாலும் அதற்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்க புதிய கொள்கை வழிசெய்கிறது” என்றார். மேலும் இதுகுறித்து ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், “தேச பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த ரஷ்ய அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார். அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அது உக்ரைன் போரை மேலும் தீவிரமாக்கும் அபாயம் உள்ளது.

 

The post அமெரிக்காவின் நீண்டதூர ஏவுகணைகளை வீசி தாக்கியதால் உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த புடின் ஒப்புதல்: போர் பதற்றம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article