
சிவ பக்தர்களின் முக்கியமான வழிபாட்டு நாள் சனி மகா பிரதோஷம் ஆகும். இந்த நாளின் பிரதோஷ வேளையில் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெறும். குறிப்பாக, நந்தி தேவருக்கான அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்று தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.
அவ்வகையில் வைகாசி மாத சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் நடைபெற்ற பிரதோஷ பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானையும் நந்தீஸ்வரரையும் வழிபட்டனர்.
சேலம் சுகவனேஸ்வரர் கோவில்
சேலம் டவுனில் உள்ள பழமை வாய்ந்த சுகவனேஸ்வரர் கோவிலில் சுகவனேஸ்வரருக்கும் நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. மாலை 7 மணி அளவில் சிவபெருமான், பார்வதி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்திற்குள் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

செங்கோட்டை
செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி கோயில உடனுறை குலசேகரநதார் கோயிலில் சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தன. இதனை முன்னிட்டு மாலை 4:30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்ப கலச பூஜை ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி மற்றும் நந்தி பெருமானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், இளநீர், சந்தனம் போன்ற நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைப்பெற்றன. பூஜையின் நிறைவில் பக்தர்களுக்கு பொங்கல், சாதம், பஞ்சாமிர்தம், சுண்டல் என பிரசாதம் வங்கப்பட்டது.
இதேபோன்று செங்கோட்டை, இலத்தூர், புளியரை உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.

பரமத்திவேலூர்
பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரமேஸ்வரர், நந்தி பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூர் எல்லையம்மன் கோயிலில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏகாம்பரேஸ்வரர், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வட பழனியாண்டவர் கோயிலில் எழுந்தருளியுள்ள பருவதீஸ்வரர், வெங்கரை, ரகுநாதபுரம் காவிரி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர், பரமத்தி வேலூர் வல்லப விநாயகர் கோயிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கு வைகாசி மாத சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் அந்தந்தப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திருவெண்காடு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனடியாக சுவேதாரனேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது இக்கோயிலில் சிவபெருமானின் மூன்றாவது கண்ணில் இருந்து விழுந்த தீப்பொறியிலிருந்து உருவான முக்குளங்கள் உள்ளன. இங்கு சிவபெருமான் அகோர மூர்த்தி சுவாமியாக அருள்பாலிக்கிறார். காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையாக இக்கோவில் விளங்குகிறது.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் உள்ள நந்தி பகவான் உடலில் காயங்கள் ஏற்பட்டதற்கான வடுக்கள் காணப்படுகின்றன. முன்பு ஒரு காலத்தில் மருத்துவாசுரன் என்ற அசுரன் தனது தவ வலிமையால் சிவபெருமானிடம் காட்சி பெற்று சூலாயிரத்தை பெற்றான். அந்த சூலாயுதத்தால் தேவர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினான். அப்போது நந்தி பகவான் சென்று மருத்துவாசுரனிடம் முறையிட்டபோது மருத்துவாசுரன் சூலாயுதத்தால் நந்தி பகவானையும் தாக்கினார். அந்த சூலாயுதத்தால் தாக்கப்பட்ட வடுக்கள் தற்போது இக்கோவிலில் உள்ள நந்தி சிலையின் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரசித்தி பெற்ற இந்த நந்தி பகவானுக்கு வைகாசி மாத சனி மகா பிரதோஷத்தையொட்டி நறுமண வாசனை திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி அம்பாள் பல்லக்கு வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் வீதி உலா நடைபெற்றது.

சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் வடகரையில் பிரளயநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. விசாக நட்சத்திரத்துக்குரிய திருக்கோவிலாகும். இங்கே வைகாசி மாத சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் பிரியாவிடையுடன் ரிஷப வாகனத்தில் திருக்கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர் மாவட்டம்
கரூர் மாவட்டம், நன்செய் புகளூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு வைகாசி மாத சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பாகவல்லி அம்பிகை,மேகபாலீஸ்வர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் சேங்கல் மலை வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள நந்தி பெருமான், நொய்யல் அருகே சேமங்கி மாரியம்மன் கோவில் அருகே உள்ள மங்களநாதர் சமேத கமலாம்பிகை கோவிலில் உள்ள நந்தி பெருமான், திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோவிலில் உள்ள நந்தி பெருமான், புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள நந்தி பெருமான், குந்தாணி பாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள நந்தி பெருமான் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு வைகாசி மாத சனி மகா பிரதோஷதை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான் மற்றும் சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

வெள்ளிமலை ஆண்டவர்
திண்டுக்கல் சிறுமலை அகஸ்தியர்புரத்தில் உள்ள வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் சனி மகா பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்றது. நல்லெண்ணெய், அரிசி மாவு, திருமஞ்சன பொடி, வாசனை திரவியம், பால், தயிர், எலுமிச்சம் பழச்சாறு, பழங்கள், சர்க்கரை, பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர், அன்னம், ஜலம் என உள்ளிட்ட பொருட்களால் சிவ பெருமாளுக்கும், நந்திதேவருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.