அமெரிக்கா: கோமா நிலைக்கு சென்ற இந்திய மாணவியை பார்க்க தந்தைக்கு விசா அனுமதி

4 hours ago 1

மும்பை,

இந்தியாவின் மராட்டிய மாநிலம் சடாரா மாவட்டத்தில் வசித்து வந்தவர் நீலம் ஷிண்டே (வயது 35). அமெரிக்காவுக்கு படிப்புக்காக சென்ற இவர், கலிபோர்னியாவில் கடந்த நான்கு வருடங்களாக தங்கியிருக்கிறார். தற்போது இறுதியாண்டு படித்து வரும் நீலம் ஷிண்டே, கடந்த 14-ம் தேதி விபத்தில் சிக்கினார்.

அதிவேகமாக சென்ற கார் ஒன்று அவர் மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். உயிருக்கு போராடிய அவரை போலீசார் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் தலையில் பலத்த காயமடைந்ததால் நீலம் ஷிண்டே கோமா நிலைக்கு சென்று விட்டார்.

இதுபற்றி மராட்டிய மாநிலத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனடியாக விசா பெற்று அமெரிக்காவுக்கு சென்று மகளை பார்க்க முடிவு செய்தனர். இதற்காக அவசர விசா கேட்டு அவரது தந்தை விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், அவசர விசா கிடைப்பதற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.

இத்தகவலை மராட்டிய மாநில எம்.பி. சுப்ரியா சுலே, தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில், அமெரிக்காவில் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி நீலம் ஷிண்டேவின் தந்தைக்கு விசா கிடைக்க உதவும்படி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க தூதரகத்தை டேக் செய்து கோரிக்கை விடுத்துள்ளார்.

நீலம் ஷிண்டேவின் உடல்நிலை மற்றும் அவருக்கான சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை தரப்பில் அவ்வப்போது அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இறுதியாக அவர்களுக்கு அமெரிக்க தூதரகம் இன்று விசாவுக்கான அனுமதி அளித்துள்ளது. இதன்படி, நீலம் ஷிண்டேவின் தந்தை தன்ஹாஜி ஷிண்டே, அமெரிக்காவுக்கு நாளை புறப்பட்டு செல்ல இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, தூதரக அதிகாரிகள் நேர்காணல் நடத்தி அரை மணிநேரத்தில் விசாவுக்கு அனுமதி அளித்தனர்.

உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக, மத்திய மற்றும் மராட்டிய அரசுகளுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஊடகங்களும் நிறைய உதவினார்கள் என்று அவர் கூறியுள்ளார். இந்த விபத்து ஏற்படுத்தி விட்டு, காரில் தப்பி சென்ற நபரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். லாரன்ஸ் கேலோஸ் (வயது 58) என்பவரை சாக்ரமென்டோ காவல் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Read Entire Article