அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் 9 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டி

2 months ago 11

வாஷிங்டன்:

அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினரின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் இந்த முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர், வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அத்துடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய வம்சாவளி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு (கீழவை) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 9 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் 5 பேர் தற்போது எம்.பி.யாக இருக்கிறார்கள்.

1. சுகாஸ் சுப்பிரமணியம் (வயது 38)

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் ஜனநாயகக் கட்சியின் கோட்டையான விர்ஜினியா மாநிலத்தின் 10-வது தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது விர்ஜினியா மாநில செனட்டராக உள்ளார். இவர், விர்ஜினியா புறநகர் பகுதியில் இந்திய அமெரிக்கர்கள் கணிசமாக வசிக்கும் மாவட்டத்தில் வசிக்கிறார். முன்னதாக ஜனாதிபதி பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, வெள்ளை மாளிகை ஆலோசகராக பணியாற்றினார். நாடு முழுவதும் உள்ள இந்திய அமெரிக்கர்களிடையே பிரபலமானவர்.

2. டாக்டர் அமி பேரா (வயது 59)

இவர் 2013 முதல் கலிபோர்னியாவின் 6-வது தொகுதியின் எம்.பி.யாக இருக்கிறார். இந்த முறை பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெற்றால் இவருக்கு மூத்த தலைமை பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. பிரமிளா ஜெயபால் (வயது 59)

ஜனநாயக கட்சியில் செல்வாக்கு மிகுந்த தலைவலராக பிரமிளா ஜெயபால், 2017 முதல் வாஷிங்டன் மாநிலம் 7-வது தொகுதி எம்.பி.யாக உள்ளார். இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

4. ராஜா கிருஷ்ணமூர்த்தி

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் 2017 முதல் இல்லினாயிஸ் மாநிலம் 7-வது தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். இந்த முறையும் போட்டியிடுகிறார்.

5. ரோ கண்ணா

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் 2017 முதல் கலிபோர்னியாவின் 17-வது தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். இந்த முறையும் போட்டியிடுகிறார்.

6. தானேதர் (வயது 69)

இவர் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர். கடந்த முறை மிச்சிகன் மாநிலத்தின் 13-வது தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் மீண்டும் போட்டியிடுகிறார்.

7. டாக்டர் அமிஷ் ஷா

2018, 2020 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் அரிசோனா மாநில சட்டமன்றத்திற்கு தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் அமிஷ் ஷா, இப்போது பிரதிநிதிகள் சபை தேர்தலில் அரிசோனாவின் முதல் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் 7 முறை தொடர்ந்து பெற்றி பெற்று பதவியில் இருக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டேவிட் ஷ்வீகெர்ட்டை எதிர்த்து இவர் போட்டியிடுகிறார்.

8. டாக்டர் பிரசாந்த் ரெட்டி

குடியரசு கட்சியைச் சேர்ந்த இவர், கான்சாஸ் மாநிலம் 3-வது தொகுதியில் போட்டியிடுகிறார். மூன்று முறை ஜனநாயகக் கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற ஷரீஸ் டேவிட்ஸை எதிர்த்து களமிறங்கி உள்ளார்.

9. டாக்டர் ராகேஷ் மோகன்

குடியரசு கட்சியைச் சேர்ந்த இவர், நியூ ஜெர்சியின் 3-வது தொகுதியில் போட்டியிடுகிறார்.

இன்னும் சில மணி நேரங்களில் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. ஜனாதிபதி தேர்தலுடன், பிரதிநிதிகள் சபை தேர்தல் (435 உறுப்பினர்கள்) மற்றும் செனட் சபையின் 34 உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 

Read Entire Article