அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்றால்... இந்த 2 விசயங்களுக்கு முன்னுரிமை - கமலா ஹாரிஸ் பேட்டி

2 months ago 14

பிட்ஸ்பர்க்,

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது வழக்கம். இந்த தேர்தலில், பொதுமக்களின் வாக்குகளை விட ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள தேர்வாளர்களே வெற்றியை முடிவு செய்பவர்களாக உள்ளனர்.

அதனால், மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராவார். அமெரிக்காவில் சமூக மற்றும் பொருளாதார நிலை மேம்பாடு அடைவதற்கான வழிகளை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். விலைவாசி உயர்வு, வரி குறைப்பு, குடியேற்ற விவகாரம், பொருளாதார நெருக்கடி, துப்பாக்கி கலாசாரம் மற்றும் கருக்கலைப்பு உரிமை போன்ற விவகாரங்கள் அமெரிக்கா முழுவதும் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (6.11.2024) அதிகாலை 5.30 மணியளவில் தேர்தல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில், ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

வேறு சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்தபோதும், இந்த இரு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது. கட்சிகளின் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர். ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், முன்கூட்டியே வாக்குகளை செலுத்தும் வசதியின்படி, இ-மெயில் மூலம் நேற்று முன்தினம் தனது வாக்கை செலுத்தினார்.

இந்நிலையில், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் அவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் 2 விசயங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன் என கூறினார்.

இதுபற்றி அவர் பேசும்போது, மக்களின் வாழ்க்கை செலவுகளை குறைப்பது அவசியம். அதற்காக பல திட்டங்களை வைத்திருக்கிறேன் என்றார். வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களின் விலை உயர்வுக்கு தேசிய அளவில் தடை விதிக்கும் திட்டம் உள்ளது.

குடும்பங்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வரி குறைப்பு மற்றும் முதன்முறையாக வீடு வாங்குபவர்களுக்கு உதவியாக முன்பணம் வழங்கும் திட்டம் ஆகியவையும் உள்ளன என்று கூறியுள்ளார்.

இதேபோன்று, குடியுரிமை திட்ட நடைமுறையில் உள்ள குறைகளை சரி செய்வதற்கான தேவையும் உள்ளது. ஜனநாயக மற்றும் குடியரசு என இரண்டு அரசுகளின் நிர்வாகத்தின் கீழும் அது நீண்டகாலம் வரை சரிவர செயல்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளது. அதனை சரி செய்ய போகிறேன் என்றார்.

அதனுடன், அமெரிக்க தொழிற்சாலை, அமெரிக்க தொழிலாளர்கள் என இவற்றில் முதலீடு செய்யும் பணியும் மேற்கொள்ளப்படும். 21-ம் நூற்றாண்டில் உலகளவில் போட்டியாளராக அமெரிக்கா இருக்கும் என உறுதி செய்யப்படும். வெளிப்படையாக கூறுவதென்றால், 21-ம் நூற்றாண்டில் சீனாவுடனான போட்டியில் நாம் வெற்றி பெறுவோம். இவையே என்னுடைய முன்னுரிமையான விசயங்கள் ஆகும் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

குடியேற்ற விவகாரத்தில், எல்லையில் ஏஜெண்டுகளை அதிகரிப்பது, மனித கடத்தலை எதிர்த்து போராடுவது உள்ளிட்ட விசயங்கள் கவனத்தில் கொள்ளப்படும். இதற்காக மசோதா ஒன்றை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார். அமெரிக்காவில் மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்தும் விசயங்களை மேற்கொள்ளும் கட்சிக்கு அதிக ஆதரவு இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.

Read Entire Article