அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது எப்படி?

3 months ago 22

உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வருகிறது. நாட்டின் 60-வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 5-ம் தேதி (5.11.2024) மக்கள் வாக்களிக்க உள்ளனர். வெற்றி பெறும் வேட்பாளர் அடுத்த நான்கு ஆண்டுகள் ஜனாதிபதியாக இருப்பார். புதிய ஜனாதிபதி ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்பார்.

ஜனாதிபதி தேர்தலில் பிரதான கட்சிகளான குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இவர்கள் தவிர ராபர்ட் எப்.கென்னடி ஜூனியர் மற்றும் கார்னல் வெஸ்ட் ஆகியோர் சுயேட்சை வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். லிபர்டேரியன் கட்சி, பசுமைக் கட்சி, சோசலிசம் மற்றும் விடுதலைக்கான கட்சி, அரசியலமைப்பு கட்சி மற்றும் அமெரிக்க ஒற்றுமை கட்சி உள்ளிட்ட பல சிறிய கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

இவர்களில், கென்னடி கடந்த ஆகஸ்ட் மாதமே போட்டியில் இருந்து வெளியேறினார். ஆனால் அவரது பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெற்றுள்ளது. இதேபோல் மையவாத வேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சியை நோ லேபிள்ஸ் அமைப்பு கைவிட்டது.

தேர்தல் நடைமுறை

அமெரிக்காவில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் எந்த தேதியில் வாக்குப் பதிவு நடைபெறும்? எந்த தேதியில் புதிய ஜனாதிபதி பதவியேற்பார் என்பதும் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெறும். அதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி புதிய ஜனாதிபதி பதவியேற்பார்.

அமெரிக்காவில் மக்கள் நேரடியாக ஓட்டு போட்டு ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதில்லை. அதற்கு பதிலாக, ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கக்கூடிய தேர்வுக் குழுவுக்கே வாக்களிப்பார்கள். அவர்கள், ஓட்டு போட்டு ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள். அந்த குழுவுக்கு எலக்டோரல் காலேஜ் (Electoral College) என்று பெயர். நாடாளுமன்றத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அதே எண்ணிக்கையிலான உறுப்பினர்களை தேர்வுக் குழுவும் கொண்டிருக்கும். ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதை பணியாகக் கொண்ட இந்த குழுவினரின் வாக்குகளைப் பெறுவதற்கு வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

மக்கள் தொகையைப் பொறுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட எலக்டோரல் காலேஜ் வாக்குகள் இருக்கும். மொத்தம் 538 வாக்குகள். இதில் 270 வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக பதவியேற்பார்.

ஒருவகையில், வாக்காளர்கள் மாநில அளவில் கட்சிகளின் பிரதிநிதிகளைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். தேசிய அளவில் போட்டியிடும் வேட்பாளர்களை அல்ல.

மைனே மற்றும் நெப்ராஸ்கா மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் 'வெற்றி பெற்றவர் அனைத்து வாக்குகளையும் எடுத்துக்கொள்வார்' என்ற விதி உள்ளது. அதாவது எந்த வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளைப் பெறுகிறாரோ அவருக்கு அந்த மாநிலத்தின் அனைத்து எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் வழங்கப்படும். இதற்கு 'வின்னர் டேக்ஸ் ஆல்' என்று பெயர்.

அதனால்தான் 2016-ல் ஹிலாரி கிளிண்டன் தேசிய அளவில் மக்களின் வாக்குகளை அதிகம் பெற்றாலும், எலக்டோரல் காலேஜ் வாக்குகளை குறைவாக பெற்றதால் டிரம்பிடம் தோல்வியைத் தழுவினார். எனவே, மாநில அளவில் அதிக வாக்குகளைப் பெற்றாலும் தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தேர்வுக் குழு உறுப்பினர்கள், தங்களது கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளருக்குத்தான் வாக்களிக்கவேண்டும் என்று எந்த அரசியலமைப்பு கட்டாயமும் கிடையாது.

தேர்வுக் குழுவுக்கும் நாடாளுமன்றத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஜனாதிபதி தேர்தல் முடிந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுத்தபின் இக்குழு கலைக்கப்பட்டுவிடும்.

இந்த ஆண்டு அமெரிக்க தேர்தலைப் பொருத்தவரை அனைவரின் கவனமும் ஜனாதிபதி தேர்தல் மீதுதான் உள்ளது. ஆனால், அதே தேதியில், 435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும், செனட் சபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறும். இதுதவிர 11 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்களை தேர்ந்தெடுக்கவும் தேர்தல் நடைபெறும்.

Read Entire Article