வாஷிங்டன்,
அமெரிக்காவில் கருப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஆப்பிரிக்க-அமெரிக்க தலைவர்களில் முக்கியமானவர் 'மால்கம் எக்ஸ்' என்று அழைக்கப்படும் மால்கம் லிட்டில். இவர் 1925-ம் ஆண்டு மே 19-ந்தேதி அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் பிறந்தார். இவர் 6 வயதில் தனது தந்தையை இழந்தார். இனவெறி தாக்குதலில் இவரது தந்தை படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 13-வது வயதில் இவரது தாய் மனநல மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
பின்னர் பராமரிப்பு இல்லங்களில் வளர்ந்து வந்த மால்கம் எக்ஸ், 1946-ம் ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது இஸ்லாமிய மார்க்கத்தின் மீது இவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டதையடுத்து, 'நேஷன் ஆப் இஸ்லாம்' என்ற அமைப்பில் மால்கம் எக்ஸ் இணைந்தார். அந்த அமைப்பில் இருந்தவாறு கருப்பின மக்களின் உரிமைகள் மற்றும் மறுவாழ்வுக்காக தொடர்ந்து மால்கம் எக்ஸ் குரல் கொடுத்து வந்தார்.
சுமார் 12 ஆண்டுகள் நேஷன் ஆப் இஸ்லாம் அமைப்பின் பிரதான பேச்சாளராக திகழ்ந்த மால்கம் எக்ஸ், அந்த அமைப்பின் தலைவர் எலிஜா முகமதுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அங்கிருந்து வெளியேறி தனி அமைப்பை நிறுவினார். அதோடு தன் பெயரை அல்ஹாஜ் மாலிக் அல் சபாஸ் என மாற்றிக்கொண்டாா். இதனைத் தொடர்ந்து 1965-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந்தேதி, நியூயார்க்கில் தனது 39-வது வயதில் மால்கம் எக்ஸ் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது படுகொலை தொடர்பாக 'நேஷன் ஆப் இஸ்லாம்' அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இன்று வரை அமெரிக்க வரலாற்றில் முக்கியமான மனித உரிமை போராளியாகவும், கருப்பின விடுதலை செயல்பாட்டாளராகவும் மால்கம் எக்ஸ் அறியப்படுகிறார். அமெரிக்காவில் கருப்பின மக்களிடையே இஸ்லாம் பரவுவதற்கு முக்கிய காரணமாக மால்கம் எக்ஸ் இருந்துள்ளார். அவரை கவுரவிக்கும் விதமாக அமெரிக்காவில் மே 19-ந்தேதி 'மால்கம் எக்ஸ் தினம்' அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மால்கம் எக்ஸ் கொல்லப்பட்டு சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு, அவரது 3 மகள்கள் அமெரிக்க காவல் அமைப்புகள் மீது 100 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக மான்ஹாட்டன் பெடரல் கோர்ட்டில் அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், சி.ஐ.ஏ., எப்.பி.ஐ. மற்றும் நியூயார்க் காவல்துறை ஆகிய அமெரிக்க காவல் அமைப்புகளுக்கு தங்கள் தந்தையின் படுகொலை திட்டம் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்ததாகவும், ஆனால் அவர்கள் அதை தடுக்க தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் தங்கள் தந்தையின் படுகொலையில் அமெரிக்க காவல் அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக சி.ஐ.ஏ. மற்றும் நியூயார்க் காவல்துறை தரப்பில் இதுவரை பதிலளிக்கப்படவில்லை. அதே சமயம், எப்.பி.ஐ. தரப்பில், கோர்ட்டு வழக்குகள் தொடர்பாக கருத்து கூறுவது எங்கள் வழக்கம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.