வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் வெளிநாட்டில் தொழில் வாய்ப்புகளை பெறவும், தக்க வைக்கவும் அந்தந்த நாட்டு அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதை தடுக்க 1977ல் இயற்றப்பட்ட எப்சிபிஏ சட்டம் அமலில் உள்ளது. சமீபத்தில், இந்த சட்டத்தின் கீழ் குஜராத் தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்தியாவில் சோலார் மின் ஒப்பந்தத்தை பெறுவதற்காக அவரது குழுமம் அதிகாரிகளுக்கு ₹2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க நீதித்துறை அதானிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், 50 ஆண்டுக்கு மேலான இந்த சட்டத்தை மறுஆய்வு செய்யக் கோரி, சட்ட அமலாக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், எப்சிபிஏ சட்டத்தின் கீழ் விசாரணைகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் 180 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும். 6 மாதத்திற்கு அமெரிக்க அட்டர்னி ஜெனரல் சட்டம் குறித்து மறுஆய்வு செய்து, திருத்தங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பார். தற்போதைய வழக்குகள் குறித்தும் அவற்றை தொடர வேண்டுமா என்பது குறித்தும் முடிவுகள் எடுக்கப்படும். எனவே டிரம்பின் இந்த நடவடிக்கை அதானி குழுமத்திற்கு இடைக்கால நிவாரணமாக கருதப்படுகிறது.
மேலும், முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சி காலத்தில் அதானி குழுமத்துக்கு எதிரான லஞ்ச குற்றச்சாட்டு முட்டாள்தனமானது என்றும் அது அமெரிக்கா, இந்தியா உறவை பாதிக்கிறது என்றும் அமெரிக்காவை சேர்ந்த 6 எம்பிக்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
The post அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு; வெளிநாட்டு லஞ்ச குற்றச்சாட்டை விசாரிக்கும் சட்டம் இடைநிறுத்தம்: அதானிக்கு நிவாரணம் appeared first on Dinakaran.