
தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் கால் பதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க. காய்களை நகர்த்தி வருகிறது. அந்த வகையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில் இப்போதே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை? என்பதை முடிவு செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்துள்ளார்.
இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியை அறிவிக்க இருக்கிறார். கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற உள்ள இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் 7 இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
எனவே, அமித்ஷாவை தாண்டி மேடையில் இருக்கப்போகும் மற்ற 6 தலைவர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு தற்போது நிலவி வருகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. செயல் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் மேடையில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.