சென்னை: “பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று அமித் ஷா கூறவில்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இருந்து இன்று (புதன்கிழமை) அதிமுக வெளிநடப்பு செய்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு ஏன் என்று விளக்கிப் பேசினார். தொடர்ந்து அவரிடம் பல்வேறு கேளிகளும் கேட்கப்பட்டது. அதில் கூட்டணி தொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “பாஜக - அதிமுக கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்கும் என்றே உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னார். மீண்டும் அவர் தெளிவுபட டெல்லியில் மோடி தலைமையிலும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைகிறது என்று கூறினார். கூட்டணி என்று தான் சொன்னாரே தவிர கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. நீங்களாகவே ஏதாவது பொருள் தேடாதீர்கள்” என்று கூறினார்.