புதுடெல்லி: “டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்த போது கூட்டணி பற்றி பேசவில்லை. மக்கள் பிரச்சினைகள் பற்றியே பேசினோம்.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் இன்று (மார்ச் 26) காலையில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக நேற்று, அமித் ஷா தனது எக்ஸ் வலைதளத்தில், “2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்” என்று பதிவிட்டிருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாகவே பேசப்பட்டது. ஆனால் அவற்றைப் புறந்தள்ளும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி அமைந்துள்ளது.