புதுச்சேரி: புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நடைமுறை இன்று முதல் அமலானது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்ததோடு, ஹெல்மெட் அணிய அறிவுறுத்தினர்.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில் புதுச்சேரியில் செயல்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. இதனிடையே புத்தாண்டு முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்தது. அதன்படி போக்குவரத்து போலீஸாரும் ஹெல்மெட் அணிவது குறித்து பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர். வினாடி-வினா போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு ஹெல்மெட் இலவசமாக வழங்கினர்.