
மும்பை,
மும்பை பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள கைசர்-ஐ-ஹிந்த் என்ற கட்டிடத்தின் 4-வது மாடியில் அமலாக்கத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் அலுவலகத்தில் தீ பிடித்ததை யாரும் கவனிக்கவில்லை. இதன் காரணமாக தீ வேகமாக அலுவலகம் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. சிறிது நேரத்துக்கு பிறகு தான் அலுவலகத்தில் தீ பிடித்ததை அங்கு இருந்த காவலாளிகள் கவனித்தனர்.
உடனடியாக அவர்கள் இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் தீயணைப்பு படையினர் 8 தீயணைப்பு வாகனங்கள், 6 ஜெட்டிஸ், வாட்டர் டேங்கர்கள், நவீன தீயணைப்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிடித்த தீயை வீரர்கள் அணைத்தனர்.
தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் அலுவலகத்தில் இருந்த நாற்காலிகள், பீரோக்கள், மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமாகின. இதேபோல மெகுல் சோக்சி, நீரவ் மோடி, புஜ்பல் வழக்கு ஆவணங்கள் மற்றும் மராட்டிய அரசியல் தலைவர்கள் சகன் புஜ்பல், அனில் தேஷ்முக் வழக்கு ஆவணங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,850 கோடி கடன் பெற்று மோசடி செய்தவர் மெகுல் சோக்சி. வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் தேடப்படுபவர் வைர வியாபாரி நீரவ் மோடி. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.