அப்பர் கண்ட ஆதிரையும் ஆரூரும்

7 hours ago 2

திருஞானசம்பந்தப் பெருமானார் திருப்புகலூரில் எழுந்தருளியிருந்தபோது, அப்பர் அடிகளார் திருவாரூரை வழிபட்டு, அடியார்கள் புடைசூழ புகலூருக்கு வந்து சேர்ந்தார்.

அப்போது ஞானப்பிள்ளையார் வாகீசப் பெருமானாரிடம் ‘‘ஆரூரின் பெருமைகளை விரித்துரைக்க’’ என வேண்ட வாகீசரும் ‘‘முத்து விதானம்’’ எனத் தொடங்கும் அற்புதத் திருப்பதிகத்தால் தான் ஆரூரில் கண்ட ஆதிரை விழாவின் சிறப்புகளை எடுத்துரைக்கலானார்.

“ஆடரவக் கிண்கிணிக்காலன் னோர்
ஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாரூரே’’

என ஆரூரில் ஆதிரை விழாவில் ஆனந்த நடம் புரிந்த பெருமானின் பல்வேறு பெருமைகளை எல்லாம் பேசலானார். அப்பரால் கூறப்படும் அந்த ஆடுந்தீக் கூத்தனின் ஆடல்கள் மிகப் பலவாகும். சக்திமார் ஐவருக்காக – இப்பெருமான் நடனம், நாட்டியம், தாண்டவம், நிருத்தம், நிருத்தியம் எனும் ஐவகை ஆடலும் ஆடிக் காட்டியதாகப் பரதசேனாதிபதியம் எனும் நூல் விளக்குகின்றது. பைரவராகவோ வீரபத்திரராகவோ இடுகாடாம் சுடலையில் பத்துப் புயங்களுடன் தேவியும் பூதகணங்களும் ஆட ஊழிக்கூத்து ஆடும் தாண்டவம் புகழ் வாய்ந்த ஒன்று. அடுத்து அந்தி மயங்கும் நேரத்தில் இமயத்தில் தெய்வீக இசையின் மத்தியில் ஆடும் நடனம் சிறப்புடைய ஒன்றாகும். இதனை சிவப் பிரதோஷ ஸ்தோத்திரம் எனும் செய்யுள் சிறப்பாகக் கூறுகிறது.

மூவுலகின் அன்னையாம் உமையை ஆசனத்தில் அமர்த்தி இமயத்தில் சூலபாணி நடனமாடுவதை விவரிக்கின்றது. இவ்விதம் ஆடும் சிவனின் உருவில், இரண்டு கரங்கள் மட்டும் உண்டு. காலடியில் முயலகன் இல்லை. மூன்றாவதாக தில்லையம்பதியில் பொன்னம்பலத்திலே சபையின் நடுவே ஆடும் நடனம் ஆனந்தத் தாண்டவமாகும். கோயில் புராணம் நடராசர் சின்னங்களுக்கு விளக்கம் தருகிறது. தாருகா வனத்தில் மீமாம்சை வழியைப் பின்பற்றி வாழ்ந்தனர் முனிவர் பலர்.

இவர்களை நல்வழிப்படுத்த திருமால் மோகினி வடிவிலும், சிவன் ஆடையற்ற ஆடவர் வடிவிலும் சென்றனர். மோகினியின் அழகிலே தங்களை மறந்தனர் முனிவர்கள். சிவனிடத்து தங்கள் மனைவியர் மயங்குதல் கண்டு கோபமுற்றனர். யாக குண்டத்திலிருந்து புலியொன்று தோன்றி சிவனைத் தாக்க முற்பட்டது. அதனை தன் விரல் நகத்தால் கொன்று தோலை ஆடையாக உடுத்தார் அண்ணல். இதன் பின்னர் ஒரு கொடூர அரவைத் தோற்றுவித்தனர் முனிவர்கள்.

அதனை எடுத்து தன் கழுத்தில் மாலையாக அணிந்து நடனமாட ஆரம்பித்தார். பின்பு குள்ள பூதமொன்று சிவன்மேல் பாய்ந்தது. முயலகன் எனும் அப்பூதனை தன் காலடியில் இருத்தி நடனமாடினார். அண்ணல் ஆடிய நடனத்தில் முனிவர்களும் தேவர்களும் தங்களை மறந்தனர். பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளுக்காக தாருகாவனத்தில் அன்று ஆடிய அந்த ஆனந்தத் தாண்டவத்தை தில்லையம்பதியில் ஆதிரை நன்னாளில் மீண்டும் ஆடினார்.

அண்ணல் ஆடியதால் அகிலமே ஆடியது. ஒப்பரிய பரதம் விளைந்தது. குட முழவம் வீணை தாளங்குறு நடை சிறுபூதம் முழக்கமாக் கூத்தாடுவதாகவும், குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை குறட்பூதம் முன்பாடத் தான் ஆடுவதாகவும் அப்பர் பெருமானால் பேசப்படும் இவ்விறைவனாம் ஆடவல்ல பெருமான் வகுத்த அந்த ஆடற்கலை தமிழகத்தில் பலநூறு ஆண்டுகளாகச் செழித்து வளர்ந்த ஓர் கேந்திரம் திரு ஆரூர் எனும் திருவாரூரேயாகும்.

இதனை வரலாற்றுச் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. ஆரூர் திருக்கோயிலில் ‘‘தேவாசிரியம்’’ எனும் பெருமைமிகு மண்டபம் ஒன்றுண்டு. இங்குதான் சுந்தரர் திருத்தொண்டத் தொகை அருளியதாகப் பெரியபுராணம் பேசும். சிறப்புமிகு இம்மண்டபத்தில் உள்ள சிம்மாசனத்தில், தியாக வினோதனாம் ஆரூர் பெருமான் அமர்ந்து ஆடலும் பாடலும் கண்டுகளித்தார் என்பதை கல்வெட்டுச் செய்திகளால் அறியும்போது ஆடற்கலை இங்கு பெற்ற ஆக்கத்தினை நன்குணர முடிகிறது.

முதற் குலோத்துங்கனின் 49ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1118) வீதிவிடங்கதேவர் தேவாசிரிய மண்டபத்தில் எழுந்தருளி ‘‘புக்கத்துறை வல்லவத் தலைக்கோலி என்ற ஆடல் அணங்கின் நடனத்தைக் கண்டுகளித்ததாகவும், விக்கிரம சோழனின் 5ஆம் ஆண்டில் (கி.பி. 1123) ‘‘தியாக வினோத தலைக்கோலியின்’’ ஆடலைக் கண்டு மகிழ்ந்ததாகவும் கூறுகிறது. பிறிதொரு சோழ மன்னனின் கல்வெட்டில் வீதிவிடங்கப் பெருமான் ‘‘பூங்கோயில் நாயகத் தலைக்கோலி’’ என்ற ஆரணங்கின் ஆடலையும் ‘‘வீரசோழ அனுக்க விஜயம்’’ என்ற கூத்தினையும் கண்டு மகிழ்ந்ததாகக் கூறுகிறது. இவை அனைத்து கல்வெட்டுகளுமே சோழப் பெருமன்னர்கள் காலத்தில் ஆரூர் திருக்கோயிலில் தேவாசிரிய மண்டபத்தில் இறைவனை எழுந்தருளச் செய்து அவ்விறைவன் முன்பு தலைசிறந்த ஆடல் அரசிகளின் (தலைக்கோலி) நடனம் நடைபெற்றன என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

இதனை மாமன்னர்களின் கல்வெட்டுகள் கூறும்போது இறைவனே கூறுவது போன்று ‘‘நான் இன்ன தலைக்கோலியின் ஆடலைக் கண்டு களித்தேன்’’ என்ற சொற்களால் எழுதப்பட்டிருக்கும் பாங்கு இந்த ஆடல் அணங்குகளுக்கு சோழப் பெருமன்னர்கள் அளித்த ஓர் உயர்வை வெளிப்படுத்துகின்றன.‘‘தென்திசை மேரு’’ என அழைக்கப்படும் தஞ்சைப் பெருங்கோயிலில் சோழ மண்டலம் முழுவதிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 400 தலைசிறந்த ஆடல் அரசிகளை தினந்தினம் நடம் புரிவதற்கென்றே முதலாம் ராஜராஜன் நியமித்தான்.

அவ்வாறு அப்பெருந்தகை தேர்ந்தெடுத்த 400 மகளிரின் ஊரும் பேரும் தஞ்சைப் பெருங்கோயில் கல்வெட்டுகளில் பட்டியலாக எழுதியுள்ளான். அவர்களில் 51 பேர் ஆரூர் திருக்கோயிலில் நடம் புரிந்தவர்கள் என்பதைக் காணும்போது ஆடற்கலையில் ஆருரின் பங்கு தெளிவாகப் புலப்படுகிறது. இப்பேரரசனின் மகனான முதலாம் ராஜேந்திரன் கடாரம் வரை வென்ற பெருமகன். இப்பெரு வீரனை தன் உயரிய பக்தியால் கவர்ந்தாள் ஓர் ஆடல் அரசி.

அவளது பெயர் அனுக்கியர் பரவை நங்கை என்பதாகும். ஆரூர் திருக்கோயிலில் பணிபுரிந்த இந்த நங்கையின் வேண்டு கோளுக்காக அவ்விடங்கப் பெருமானின் கோயிலைக் கற்றளியாக மாற்றியமைத்தான் இம்மன்னவன். கோயில் முழுவதையுமே பொற்தகடுகளால் போர்த்தினான். நாட்டியத் தாரகை பரவையை தன்னோடு தேரில் சமமாக அமரச்செய்து திருவாரூர் வீதிகளில் பவனி வந்தான். பவனி வந்தது மட்டுமின்றி அவர்கள் இருவரும் ஆரூர் இறைவனை நின்று வணங்கிய இடத்தில் நினைவாக ஒரு குத்துவிளக்கையும் வைக்கச் செய்தான். இத்தனைச் செய்திகளையும் ஆரூர் கோயில் சுவரில் கல்வெட்டாகவும் பொறிக்கச்செய்தான். ராஜேந்திர சோழனால் எடுக்கப்பெற்ற தியாகேசனின் திருக்கோயில் கருவறை அதிட்டானத்தில் அரிய ஒரு தகவலை ராஜேந்திர சோழனே பதிவு செய்தான்.

தன் தந்தையின் பிறந்த நாள் ஐப்பசி சதயம் என்றும், தான் பிறந்தது ஆடித் திருவாதிரை என்றும் கல்வெட்டாக வெட்டி வைத்தான். அந்த ஆடித் திருவாதிரைக்கு விழா எடுப்பிக்க நிவந்தம் அளித்தான். இதே ஆடித் திருவாதிரையை பின்வந்த இரண்டாம் குலோத்துங்கன் சிறப்புறக் கொண்டாடியதாக மற்றொரு கல்வெட்டு கூறுகிறது. திருவாரூர் திருக்கோயிலில் திருவாதிரை விழா என்பது அப்பர் காலந்தொட்டு பல்லாற்றானும் சிறப்புறு விழாவாகக் கொண்டாடப்பெற்று வந்துள்ளது.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post அப்பர் கண்ட ஆதிரையும் ஆரூரும் appeared first on Dinakaran.

Read Entire Article