* கல்யாணசுந்தரனாருக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் நினைவரங்கம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடந்த தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில் அமைச்சர் மு.பெ சாமிநாதன் 14 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்விவரம்:
* தாய்மொழி, தாய்நாடு என்று பெருமிதமாக சொல்லும் வண்ணம் கலைஞர் தலைமையில் 2010-ஆம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றது. அந்த மாபெரும் விழாவினை எந்நாளும் நினைவில் கொள்ளும் வகையிலும், தமிழன்னைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் முகமாகவும் கோவையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தமிழ்த்தாய் சிலை நிறுவப்படும்.
* தமிழ்மொழியின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் பற்றுக்கொண்டு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பினைப் போற்றும் விதமாக தற்போது திங்கள்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையினை தமிழறிஞர்களுக்கு ரூ.4,500/-லிருந்து ரூ.7,500/- ஆகவும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ரூ.3,500/-லிருந்து ரூ.7,500/- ஆகவும், எல்லைக் காவலர்களுக்கு ரூ.5,500/-லிருந்து ரூ.7,500/- ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
* மேலும் 10 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்படும். இதற்கென தொடராச் செலவினமாக ரூபாய் 1 கோடியே 1 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படும்.
* தமிழ்த்தென்றல் கலியாணசுந்தரனாரைப் போற்றும் வகையில் அவர் பிறந்த இடமான துள்ளம் என்கின்ற துண்டலம் கிராமத்தில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் நினைவரங்கமும், மார்பளவு வெண்கலச் சிலையும் நிறுவி, அங்குள்ள நூலகமும் மேம்படுத்தப்படும்.
* புதுதில்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பன்னோக்கு கலையரங்கத்தின் அருகில் அய்யன் திருவள்ளுவரின் சிலை நிறுவப்படும். இதற்கென தொடராச் செலவினமாக ரூபாய் 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
* கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த நாளான நவம்பர் 9-ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
* அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபாவின் பிறந்த நாளான ஜூன் 15-ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
* உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘அறிஞர்களின் அவையம்’ என்ற பெயரில் துறை சார்ந்த வல்லுநர்களின் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்தோறும் நடத்தப்படும்.
* உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘தொல்காப்பியர் சுழலரங்கம்: மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம்’ சிறப்புப்பொழிவு நடத்தப்படும்.
* உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு திங்கள்தோறும் கல்வி உதவித் தொகையும் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். விடுதியில் தங்கிப்பயிலும் 45 மாணவர்களுக்கு 2025-2026 கல்வியாண்டு முதல் உணவு வழங்க ஏதுவாக ரூபாய் 12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
The post அப்துல் ரகுமான் பிறந்தநாள் அரசு விழா; கோவை செம்மொழி பூங்காவில் தமிழ்த்தாய் சிலை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு appeared first on Dinakaran.