அபூர்வ தகவல்கள்

2 hours ago 2

இரண்டும் ஒரே திசையில்

பொதுவாக பெருமாள் கோயில்களில் ராஜகோபுர நுழைவாயில் ஒரு திசையிலும், சொர்க்க வாசல் ஒரு திசையிலும் இருக்கும். ஆனால், சின்ன காஞ்சிபுரம் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சொர்க்க வாசலும், கோயிலின் நுழைவாசலும் வடக்கு நோக்கியே உள்ளன.

முக்கோலப் பெருமாள்

பெருமாள் கோயில் என்றாலே அவரது அனந்தசயனத் திருக்கோலம்தான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளுக்கோட்டைக்கு அருகிலிருக்கும் மலையடி கிராமத்தில் அருள்பாலிக்கும் பெருமாள் நின்ற, அமர்ந்த, படுத்த ஆகிய மூன்று கோலங்களிலும் அரிதாகக் காட்சி அளிக்கிறார். இக்கோயில் தஞ்சை பெரிய கோயிலை விட காலத்தால் முற்பட்டது என்கிறார்கள்.

மோட்சம் அளிக்கும் தலம்

ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது நத்தம். திருவரகுண மங்கை, திருத்தலம். இங்கு விஜயாசனப் பெருமாள் கோயில் கொண்டுள்ளார். இத்தலத்தில் பிரம்மாவின் கர்வத்தை அழித்த ரோமேச ரிஷிக்கும் யமனிடம் போராடி கணவனை மீட்ட சாவித்திரிக்கும் பெருமாள் காட்சி கொடுத்துள்ளார். இத்தலத்தில் உயிர் நீத்தால் மோட்சம் கிடைக்கும் என்று ேராமேச முனிவர் கூறியிருக்கிறார்.

தோஷம் நீக்கும் நவகிரக அமைப்பு

ஸ்ரீ சத்யநாராயண பெருமாள் கோயில் நங்கநல்லூரில் அமைந்துள்ளது. இங்கு மூலவரின் பிராகாரத்தில் ராகு, கேது கிரகங்களுக்கு இடையே ஏனைய ஏழு கிரகங்களும் இருக்கின்றன. இப்படி இருப்பது ‘கால சர்ப்பதோஷம்’ எனப்படும். அவ்வாறு தோஷம் இருப்பவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

கத்திக்கு பூஜை

ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகே மட்டபல்லி’ என்கிற ஊரில் ஒரு பெருமாள் கோயில் உள்ளது. அவரது இடுப்பில் கத்தி ஒன்று உள்ளது. பக்தர்கள் தங்களின் அறுவை சிகிச்சைக்காக வேண்டிக் கொள்கிறார்கள். நல்லபடியாய் குணமடைந்தபின் இங்கு வந்து இறைவனின் இடுப்பில் இருக்கும் கத்திக்கு விசேஷ பூஜை செய்கிறார்கள்.

பங்குனி உத்திரத்தில் நால்வருடன் பெருமாள்

மதுரை அருகே உள்ள அழகர்கோயில் சுந்தர ராஜப் பெருமாள் கோயில் பங்குனி உத்திரத்தில் பெருமாள் திருமணக் கோலத்தில் காட்சி தருவார். அன்று ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி, ஆண்டாள் ஆகிய நால்வருடன் காட்சி தருவார். இது எந்த ஆலயத்திலும் காண முடியாத காட்சியாகும். அதே போல இங்கு மட்டும்தான் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

நெற்றிக் கண்ணுடன் பெருமாள்

கடலூர் அருகேயுள்ள திருவஹீந்திரபுரத்தில் உள்ள தேவநாத பெருமாள் கோயிலில் உள்ள உற்சவ மூர்த்தி விசேஷமானவர். இவர் மும்மூர்த்திகளும் இணைந்தவராக காணப்படுகிறார். அவரது வலது கரத்தில் பிரம்மதேவரின் தாமரைப்பூவும், நெற்றியில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணும், சிரசில் சடையும், இரண்டு கரங்களில் சங்கு சக்கரமும் இருக்கிறது.

The post அபூர்வ தகவல்கள் appeared first on Dinakaran.

Read Entire Article