
லாகூர்,
8 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து இங்கிலாந்தின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கட் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அதிரடியாக தொடங்கிய பில் சால்ட் முதல் ஓவரிலேயே பவுண்டரியும், சிக்ஸரையும் விளாசினார். இதனால் இப்போட்டியில் அவர் ரன்களைக் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை பென் துவார்ஷூயிஸ் வீசினார். அப்போது ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட பில் சால்ட் மிட் ஆன் திசையில் பவுண்டரி அடிக்க நினைத்து தூக்கி அடித்தார். ஆனால், அவரால் எதிர்பார்த்தை போல் அந்த ஷாட்டை விளையாட முடியாத காரணத்தால், பந்து காற்றில் இருந்தது.
அப்போது 30 யார்ட் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த அலெக்ஸ் கேரி அந்த பந்தை அபாரமாக கேட்ச் பிடித்து ஆச்சரியப்படுத்தினார். அலெக்ஸ் கேரியின் இந்த கேட்ச்சை கண்ட அனைவரும் ஒருகணம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
இதனால் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பில் சால்ட் 10 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு நடையைக் கட்டினார். இந்நிலையில், அலெக்ஸ் கேரி பிடித்த இந்த கேட்ச் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.