அன்று ராணுவ அதிகாரி…இன்று விவசாயி!

6 hours ago 3

நன்றி குங்குமம் தோழி

நாட்டை காப்பவர் ராணுவ வீரர் என்றால், பயிர் நிலங்களை காப்பவர்கள் விவசாயிகள். இவர்கள் இல்லாமல் நம் வீட்டில் உணவு கிடையாது. மதுரை கொட்டாம்பட்டி அருகிலுள்ள குன்னாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். சில காலம் முன்பு வரை நாட்டை பாதுகாத்து வந்தார். இப்போது அதே மக்களின் நலனுக்காக விவசாய நிலங்களை பாதுகாத்து, மற்ற விவசாயிகளுக்கு முன் உதாரணமாக, விவசாயத்தில் பல புதுமை யுக்திகளை புகுத்தி வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார் முன்னாள் ராணுவ வீரரான லெப்டினன்ட் கர்னல் சத்தியமூர்த்தி. இவரின் ‘தாய் ஒருங்கிணைந்த இயற்கை விவசாய பண்ணை’ மூலம் வெற்றிகரமான விவசாயத்தை மேற்ெகாண்டு வருபவரை சந்தித்ேதாம்.

ராணுவ அதிகாரிக்கே உரித்தான மிடுக்கு… கம்பீரத்துடன் கலகலப்பாக தனது ராணுவம் மற்றும் விவசாய வாழ்க்கை இரண்டையும் பற்றி விவரமாக பேசினார். ‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே குன்னாரம்பட்டி கிராமத்தில்தான். என்னுடைய அப்பாதான் இந்தக் கிராமத்தின் முதல் பட்டதாரி. அம்மா இல்லத்தரசி என்றாலும் எங்களை நல்வழிகாட்டி வளர்த்து ஆளாக்கியவர். அம்மா இப்போது இல்லை.

அதனால் அவரின் பெயரில், ‘தாய் அக்ரோ ப்ராடக்ட்ஸ்’ என்ற நிறுவனத்தை துவங்கி விவசாய மதிப்புக்கூட்டும் பொருட்களான தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். என் அப்பாவிற்கு விவசாயம்தான் தொழிலாக இருந்தது. இன்றும் தன்னுடைய 70 வயதில் அதனை மிகவும் ஆர்வமாக செய்து வருகிறார். நான் சிறுவனாக இருக்கும் போதே அப்பா கொஞ்சம் கொஞ்சமாக நிலங்களை வாங்கி அதில் விவசாயம் செய்தார்.

அவரின் சுறுசுறுப்பினை பார்த்து வளர்ந்ததால் எனக்கும் விவசாயம் மேல் ஈடுபாடு ஏற்பட ஆரம்பித்தது. நான் +2 முடித்தவுடனே 17 வயதில் இந்திய ராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்து விட்டேன். அங்கு சேர்ந்தவுடன் கிடைக்கும் நேரத்தில் மேற்படிப்பில் சேர்ந்து, நேஷனல் டிபென்ஸ் அகாடமியில் ACC தேர்வினை எழுதினேன். மூன்று வருடம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ராணுவ பயிற்சி உடன் பட்டப்படிப்பும் முடித்தேன். ஒன்பது வருடம் கழித்து ‘லெப்டினென்ட் கர்னலாக பதவி உயர்வு கிடைத்தது.

120 பேர் கொண்ட கம்பெனி கமாண்டராக வடகிழக்கு அசாம் மற்றும் காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடக்காமல் பாதுகாப்பு தந்து நம் தாய்நாட்டை காப்பாற்றும் பொறுப்பில் தலைமை ஏற்று செயல்பட்ட அந்த நாட்களை என்னால் என்றுமே மறக்க முடியாது. என் நாட்டிற்காக நான் ஆற்றிய பணிகளை நினைக்கும் போது பெருமையாக இருக்கும்’’ என்றவர், தன் விவசாய பணிகளை பற்றி தொடர்ந்தார்.‘‘முப்பது ஆண்டுகள் ராணுவ சேவையினை ஆத்ம திருப்தியோடு செய்தேன். அதன் பிறகு நான் பிறந்த மண்ணிற்கு முதுகெலும்பான எங்க பரம்பரைத் தொழிலான பெருமைமிக்க விவசாய தொழிலை எடுத்து செய்ய விரும்பினேன்.

அதனால் ராணுவ சேவையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று கடந்த ஐந்து வருடமாக முழுமையாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். பலரும் நான் எடுத்த முடிவு தவறு என்றார்கள். ஆனால் இது என்னுடைய மண். அதை செழிப்பாக மாற்றுவதை என்னுடைய கடமையாக நினைத்தேன். அதனால் கடின உழைப்பினை செலுத்தி எங்க கிராமத்தின் மற்ற விவசாயிகளுக்கு விழிப்புணர்ச்சி தரும் வகையில் பண்ணை ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் பல விஷயங்களை செய்து வருகிறேன்.

நான் விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்த போது, எங்க நிலங்களுக்கு வரக்கூடிய வாய்க்கால் பழுதாகி இருந்தது. அதனால் அதில் இருந்து தண்ணீரை நிலங்களுக்கு செலுத்த முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டனர். இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி வாய்க்கால் புதிதாக அமைத்து அதன் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச செய்தேன். இது தவிர சொட்டு நீர் பாசனம், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தினை விவசாயிகளுக்கு புரிய வைத்தேன்.

சொட்டு நீர் பாசனம் விவசாயிகளுக்கு நம்பிக்கை தரும் வரப்பிரசாதம். இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு பாய்ச்சக்கூடிய தண்ணீரை ஐந்து ஏக்கருக்கு பாய்ச்ச முடியும். அதனை எடுத்துச் சொல்லி இங்குள்ள விவசாயிகளை கடைபிடிக்க செய்தேன். என்னுடைய பண்ணையில் ஆதரவற்ற மற்றும் கைம்பெண்கள்தான் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு இதன் மூலம் வாழ்வாதாரம் ஏற்படுத்தி தர விரும்பினேன். தென்னை, பலா, மா மரங்கள், மிளகு செடிகளுக்கு மத்தியில் அரசு அனுமதியுடன் செம்மரங்களையும் பண்ணையில் வளர்த்து வருகிறேன்.

இவை தவிர ஆடு, மாடு, கோழிகளையும் வளர்த்து வருகிறேன். என்னுடைய பண்ணையை உதாரணமாக கொண்டு இங்குள்ள மற்ற விவசாயிகளுக்கும் எவ்வாறு தங்களின் விவசாயத்தினை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்’’ என்றவர், தன் எதிர்கால திட்டம் குறித்து விவரித்தார்.

‘‘என் கிராமத்தில் மாடல் பண்ணைகளை உருவாக்கி அதன் மூலம் விவசாயிகளுக்கு பல புதிய யுக்திகள் குறித்து ஆலோசனை வழங்க வேண்டும். நான் அடிப்படையில் விளையாட்டு வீரர் என்பதால், கிராமத்து இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளித்து அவர்களை தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க வைத்து வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர திட்டமிட்டு இருக்கிறேன்.

என் மனைவி தற்போது தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் விவசாயத்தில் ஆர்வம் இருப்பதால், என்னுடன் இணைந்து விவசாய வளர்ச்சியினை மேலோங்க திட்டமிட்டுள்ளார்’’ என்றார் சத்தியமூர்த்தி.

தொகுப்பு: விஜயா கண்ணன்

The post அன்று ராணுவ அதிகாரி…இன்று விவசாயி! appeared first on Dinakaran.

Read Entire Article