சென்னை: அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணித்த நிலையில், நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த 22 மாணவர்களுக்காக 19ம் தேதி மாணவர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும் என்று எடப்பாடி அறிவித்துள்ளார்.இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக ஆட்சியில் நீட் நுழைவு தேர்விற்கு விலக்கு அளிக்க சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானங்கள் நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக, திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட சுமார் ஒரு கோடி பேரிடம் தமிழகத்திற்கு நீட் வேண்டாம் என கையெழுத்து பெற்று குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.நீட் நுழைவு தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று மூன்றாம் கட்டமாக, நீட் நுழைவு தேர்விற்கு தீர்வு காண, சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று முன்தினம் (9ம் தேதி) தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்டது.
நீட் நுழைவு தேர்வை ஒழிக்க முடியாது என்பதை பல காரணங்கள் தெரிவித்து, அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது. 2021ல் இருந்து இன்று வரை நீட் தேர்வு அச்சத்தால் தமிழ்நாட்டில் 22 மாணவ, மாணவிகள் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக, அதிமுக மாணவர் அணியின் சார்பில் வருகிற 19ம் தேதி) சனிக்கிழமை) மாலை 6 மணி அளவில், அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணித்த நிலையில் நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த 22 மாணவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி: எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்பு appeared first on Dinakaran.