
புதுடெல்லி,
தற்போது, ரெயில் சேவைகளை பெற வெவ்வேறு செல்போன் செயலிகள் இருக்கின்றன. எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய 'ரெயில் கனெக்ட்' என்ற செயலி உள்ளது.
புறநகர் ரெயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் பெற 'யு.டி.எஸ்.' செயலி உள்ளது. இதுதவிர, தனியார் துறை செயலிகளும் இயங்கி வருகின்றன. இதற்கிடையே, இந்திய ரெயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் 'ரெயில்ஒன்' என்ற செல்போன் செயலியை ரெயில்வே அமைச்சகம் உருவாக்கி வந்தது.
இந்த நிலையில், நேற்று அந்த செயலியை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். ரெயில்வே தகவல் சேவை மையத்தின் 40-ம் ஆண்டு விழாவில் அவர் அதை அறிமுகப்படுத்தினார். எனவே, ரெயில் பயணிகள் இனிமேல் தனித்தனியாக வெவ்வேறு செயலிகளை வைத்திருக்க தேவையில்லை. இந்த செயலி, ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரிலும் கிடைக்கிறது.
இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
'ரெயில்ஒன்' செயலி, பயணிகளின் அனைத்து தேவைகளுக்கும் ஒரே தீர்வாக இருக்கும். இந்த செயலியில், முன்பதிவு ரெயில் டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட், ரெயில்கள் மற்றும் பி.என்.ஆர். எண் குறித்த விசாரணை, பயண திட்டமிடல், ரெயில் உதவி சேவைகள், ரெயிலில் உணவு முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெறலாம்.
சரக்கு தொடர்பான விசாரணை வசதியும் அதில் இடம்பெற்றுள்ளது. டிக்கெட் முன்பதிவுக்கான பணத்தை போட்டு வைக்கும் 'ரெயில்வே இ-வாலெட்' வசதியும் உள்ளது. பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தை அளிப்பதுதான் செயலியின் அடிப்படை நோக்கம். பயன்பாடு எளிதாக இருக்கும். செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு, ஏற்கனவே உள்ள 'ரெயில்கனெக்ட்' மற்றும் 'யு.டி.எஸ்.' செயலிகளின் பயனர் ஐ.டி. விவரங்களை பயன்படுத்தி, உள்ளே நுழையலாம். இதனால், எண்ணற்ற பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
எண்களை கொண்ட 'எம்பின்' மற்றும் பயோமெட்ரிக் லாகின் வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. முதல்முறையாக ரெயில்வே செயலியை பயன்படுத்துபவர்கள், குறைவான தகவல்களை அளித்து பதிவு செய்து கணக்கை உருவாக்கலாம். விசாரணை மட்டும் மேற்கொள்ள விரும்புபவர்கள், தங்கள் செல்போன் எண் மற்றும் ஓ.டி.பி.யை பயன்படுத்தி, 'கெஸ்ட் லாகின்' வசதி மூலம் உள்ளே நுழையலாம். 'ரெயில்ஒன்' செயலி அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கொண்டிருப்பது மட்டுமின்றி, ஒவ்வொரு சேவைக்கும் இடையே ஒருங்கிணைந்த தொடர்பை கொண்டிருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.