மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை தி.மு.க. அரசு கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்

5 hours ago 3

விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் சிப்காட் விரிவாக்க திட்டத்தை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருவண்ணாமலையில் விளைநிலங்களை கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நில எடுப்பு அலுவலகத்தில் கடந்த இரு தினங்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இரண்டு சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்றாவது தொழிற்பேட்டை அமைக்க செய்யாறு வட்டத்தில் உள்ள மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, மணிப்புரம் என 12 கிராமங்களை உள்ளடக்கிய விளைநிலங்களை கையகப்படுத்தியே தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் தி.மு.க. அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியான நாளில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காத தி.மு.க. அரசு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறுத்தி காவல்துறையை ஏவி வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது ஈவு இரக்கமற்ற செயலாகும்.

தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 43-வது வாக்குறுதியாக, விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்படாது என உறுதியளித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்பு உயிரை விட்டாலும் விடுவோம் எங்களின் விளைநிலத்தை விட்டுத்தரமாட்டோம் எனக்கூறும் விவசாயிகளை கைது செய்து அடக்குமுறையை ஏவியிருப்பது அவர்களுக்கு இழைக்கும் பச்சைத் துரோகம் ஆகும்.

எனவே, நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில் மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article