அனைத்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி

2 months ago 13

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 27.06.2024 அன்று தமிழ்நாடு சட்டசபையில் "ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கும் திட்ட செயலாக்கம் குறித்து ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும்" என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, ஊரகப் பகுதிகளில் உள்ள 3,29,039 மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 39,48,468 உறுப்பினர்களுக்கு ரூ. 30 கோடி மதிப்பீட்டில், நிர்வாகம், நிதி மேலாண்மை மற்றும் தலைமைத்துவம் குறித்து ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த முடிவு செய்து, தேவையான நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இப்புத்தாக்கப் பயிற்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும், வாழ்வாதார மேம்பாடு, பண்ணை மற்றும் பண்ணை சாரா செயல்பாடுகள், சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகள், திறன் பயிற்சிகள், வங்கிக் கடன் இணைப்புகள், பாலின விழிப்புணர்வு, சுய தொழில் மேம்பாடு, பிற துறைகளுடன் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்தும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்றவற்றில் சுய உதவிக் குழுக்களின் பங்களிப்பு குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

மேலும், அரசின் நலத்திட்டங்கள் குறித்த விபரங்களை கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களிடையே கொண்டு சேர்ப்பது குறித்தும் இப்பயிற்சியில் உரிய வழிமுறைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த புத்தாக்கப் பயிற்சியில் பங்கெடுப்பதின் வாயிலாக மகளிர் சுய உதவிக் குழுக்களின் தரமும், செயல்பாடும் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்புகள் நிறைந்த புத்தாக்கப் பயிற்சியானது, மூன்று குழுக்களுக்கு ஒரு அணி என்ற வகையில் (36 நபர்கள்) 1,09,678 அணிகளைச் சார்ந்த 39,48,468 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு, அந்தந்த ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழு மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிடங்களில் நடைபெற்று வருகிறது. சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டு வரும் புத்தாக்கப் பயிற்சியினை 2025-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிறைவு செய்திட துணை முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article